வி.பி.துரைசாமி கூறியதை வரவேற்கிறேன்,எந்த தவறும் இல்லை – பாஜக செய்தித்தொடர்பாளர் நரசிம்மன்
கூட்டணி தலைமை குறித்து பாஜக தேசிய தலைமை முடிவு செய்யப்படும் என்று பாஜகவின் நரசிம்மன் தெரிவித்துள்ளார்.
அண்மையில் திமுக துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து வி.பி துரைசாமியை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் பதவி நீக்கம் செய்வதாக அறிவித்தார் .இதனிடையே சென்னை கமலாலயத்தில் வி.பி.துரைசாமி பாஜக மாநில தலைவர் முருகனை சந்தித்து பாஜகவில் இணைந்தார்.வி.பி துரைசாமி பாஜக மாநில துணைத்தலைவராக நியமனம் செய்வதாக தமிழக பாஜக தலைவர் முருகன் அறிவித்தார்.
இதனிடையே நேற்று காலை கமலயத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழக பாஜக துணைத் தலைவர் வி.பி.துரைசாமி, தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமையில் தான் கூட்டணி எனவும் பாஜகவை அனுசரித்து செல்லும் கட்சிகளுடன் சட்டமன்ற தேர்தலை சந்திப்போம் என கூறினார்.
மத்தியில் ஆட்சி இருப்பதால் பாஜக தலைமையில் தான் கூட்டணி கட்சிகள் தேர்தலை சந்திக்கும் என தெரிவித்தார். அதிமுகVS திமுக என்று இருந்த நிலையில் தற்போது பாஜகVS திமுக என மாறிவிட்டது என்று வி.பி.துரைசாமி கூறினார்.
ஏற்கனவே அதிமுகவில் யார் முதல்வர் வேட்பாளர் என்ற விவகாரம் இருந்து வருகிறது. இதற்கிடையில், கடந்த ஆண்டு அதிமுக தலைமையில் கூட்டணி வைத்து பாஜக போட்டியிட்ட நிலையில் வி.பி வி.பி.துரைசாமியின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், வி.பி.துரைசாமியின் கருத்து குறித்து கேள்வி எழுப்பியபோது, கூட்டணி பற்றி தமிழக பாஜக தலைவர் முருகன் கருத்து கூறிய பிறகே அதிமுக தனது நிலைப்பாட்டை அறிவிக்கும், துணைத் தலைவர் வி.பி.துரைசாமி கூறியதை பாஜகவின் நிலைப்பாடாக எடுக்க முடியாது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், தமிழகத்தில் பாஜக மிகப்பெரிய கட்சியாக மாறி வருகிறது. அதனை வெளிப்படுத்தும் வகையில் வி.பி.துரைசாமி அப்படி கருத்து கூறினார். மேலும், அதிமுக-பாஜக கூட்டணி தொடரும் என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில் துரைசாமி கருத்து குறித்து தமிழக பாஜக செய்தித்தொடர்பாளர் நரசிம்மன் கூறுகையில், வி.பி.துரைசாமி கூறியதை முழு மனதோடு வரவேற்கிறேன்.அதில் எந்த தவறும் இல்லை.ஆனால் முடிவு எடுக்க வேண்டியவர்கள் டெல்லியில் இருக்கிறார்கள் .நிச்சயம் அவர்கள் முடிவை சீக்கிரமாக அறிவிப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.