திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற விஜய்யின் நிலைப்பாட்டை வரவேற்கிறேன் – சீமான்!
கூட்டணி வைத்துக்கொண்டு தான் தேர்தலில் எதிரியை வீழ்த்த முடியும் என்பது மரபா? என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டதில் அக்கட்சி தலைவர் விஜய் பேசிய விஷயங்கள் அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. கூட்டத்தில் பேசியிருந்த விஜய் ” TVK (தமிழக வெற்றிக் கழகம்) இன்னொன்று DMK (திராவிட முன்னேற்றக் கழகம்) இந்த இரண்டு கட்சிக்கும் தான் போட்டி . திமுகவை 2026-ஆம் ஆண்டு தேர்தலில் வீழ்த்துவோம்” எனவும் பேசியிருந்தார்.
விஜய் பேசியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், திமுகவை சேர்ந்தவர்களும் அதிமுகவை சேர்ந்தவர்களும் பேசி வரும் சூழலில், நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் விஜய் பேசியது குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை அவர் சந்தித்தபோது இது குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
அப்போது அந்த கேள்விக்கு பதில் அளித்த சீமான் ” திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற தவெகவின் தலைவர் விஜய் நிலைப்பாட்டை வரவேற்கிறேன். திமுகவுடன் மோதி மோதி அதனை வீழ்த்தவேண்டும் என நினைக்கும் என்னுடைய தம்பி விஜயின் நிலைப்பாட்டை நான் வரவேற்கிறேன். நான் ஆள் சேர்த்துக்கொண்டு சண்டைக்கு போறவன் இல்லை.
கூட்டணி வைத்துக்கொண்டு தான் தேர்தலில் எதிரியை வீழ்த்த முடியும் என்பது மரபா? அல்லது எதுவும் சட்டமா? ஒரு நாய் 4 நாய்களை சேர்த்துக்கொண்டு வேட்டைக்கு செல்கிறது என்றால் அது சரியாக இருக்கும். அதைப்போல புலி 10 புலி சேர்ந்து வேட்டைக்கு சென்றது என்றால் அது நன்றாக இருக்காது. கூட்டத்தில் நிற்பதற்கு வீரமும் துணிவும் என்பது தேவையில்லை.
அதுவே தனித்து நின்றாள் தான் வீரமும் துணிவும் தேவை. நாங்கள் வீரர்கள் தனித்து நின்று தான் மோதுவோம். நாங்கள் யாரை வீழ்த்தவேண்டும் என்று முடிவெடுத்தமோ அதற்காக தான் தெளிவாக முடிவெடுத்துவிட்டு வந்திருக்கிறோம். இன்னும் 4 மாதங்களில் யார் யாருடன் கூட்டணி வைப்பார்கள் என்பது தெரிந்துவிடும். நாங்கள் எந்த பக்கம் நிற்கப்போகிறோம் என்பதும் தெரிந்துவிடும்” எனவும் சீமான் பேசியுள்ளார்.