‘வேதனையுடன் எனது உரையை தொடங்குகிறேன்’ – ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மீண்டும் தாக்கல்..!
ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் அறிவால் உருவாக்கப்பட்ட சட்டம் அல்ல, இதயத்தால் உருவாக்கப்பட்ட சட்டம் என முதல்வர் பேச்சு.
சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு மாத கணக்காகியும் கையெழுத்திடாமல் ஆளுநர் காலம் தாழ்த்தி வந்தார். இதற்கிடையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஒப்புதல் வழங்காமல், மீண்டும் கூடுதல் விளக்கம் கேட்டு மசோதாவை திருப்பி அனுப்பி இருந்தார். அதற்கு தமிழக அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.
மத்திய அமைச்சர் விளக்கம்
ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் தமிழக ஆளுநர் காலம் தாழ்த்தி வந்த நிலையில், நேற்று சூதாட்டங்களை தங்களது வரம்பிற்கு கொண்டு வர தேவையான சட்டங்கள் இயற்ற மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது என மத்திய அமைச்சர் விளக்கமளித்திருந்தார்.
ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மீண்டும் தாக்கல்
இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், இன்று இரண்டாவது முறையாக சட்டப்பேரவையில், ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை தாக்கல் செய்துள்ளார். ஆன்லைன் ரம்மியால் இதுவரை 41 பேர் தற்கொலை செய்துள்ளனர். எனவே வேதனையுடன் எனது உரையை தொடங்குகிறேன்.
ஆன்லைன் ரம்மியை தடை செய்யும் உரிமை அரசுக்கு உள்ளது. ஆன்லைன் சூதாட்டம் குறித்து மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியோரிடம் கருத்து கேட்ட பின்பு தான் சூதாட்ட தடை சட்ட மசோதா உருவாக்கப்பட்டது. ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யுமாறு மின்னஞ்சலில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் கோரிக்கை விடுத்தனர்.
மனசாட்சி உறங்க செய்துவிட்டு எங்களால் ஆட்சி நடத்த முடியாது
மாநில பிரச்சினைகளில் முடிவெடுக்க மாநில அரசுக்கு உரிமை உண்டு. மக்களை காப்பதே அரசின் கடமை, இனி ஒரு உயிர் ஆன்லைன் ரம்மியால் பறிபோகக்கூடாது. எந்த குடும்பமும் நடுத்தெருவுக்கு வரக்கூடாது. மனசாட்சி உறங்க செய்துவிட்டு எங்களால் ஆட்சி நடத்த முடியாது.
இதயத்தால் உருவாக்கப்பட்ட சட்டம்
ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா குறித்து ஆளுநர் விளக்கம் கேட்ட 24 மணி நேரத்தில் அனுப்பி வைக்கப்பட்டது. ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் அறிவால் உருவாக்கப்பட்ட சட்டம் அல்ல, இதயத்தால் உருவாக்கப்பட்ட சட்டம். எனவே இந்த சட்டம் நிறைவேற அனைவரும் முழு மனதோடு ஒத்துழைப்பு நல்க வேண்டும். ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட சட்ட முன்வடிவை, மறு ஆய்வுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார்.