விவசாயிகள் அனைவரையும் முதல்வராகவே பார்க்கிறேன் – முதலமைச்சர் பெருமிதம்.!
காவிரி டெல்டா மாவட்டங்களை சிறப்பு வேளாண் மண்டலமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவையில் அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்தனர். பின்னர் சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்ததுக்கு திருவாரூர் மாவட்ட விவசாயிகள் முதல்வருக்கு பாராட்டு விழா ஏற்பாடு செய்தனர். இவ்விழாவில் கலந்துகொண்ட முதல்வர் பழனிசாமிக்கு, காவேரி காப்பாளன் பட்டம் வழங்கப்பட்டது. அப்போது பேசிய முதல்வர், மன நிறைவோடு வாழக்கூடியவர்கள் விவசாயிகள் என்றும் சொந்தக் காலிலே நிற்கக் கூடியவர்கள் என கவுரவித்தார்.
வெயில், மழை என்று பார்க்காமல் உழைப்பவர்கள் விவசாயிகள் எனவும் இந்தியாவில் 100க்கு 65 பேர் விவசாயிகளாக வாழ்கின்றனர், நானும் ஒரு விவசாயிதான் என்று தெரிவித்தார். மேலும் ஹைட்ரோ கார்பன் போராட்டங்களில், ஈடுபட்டவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற அரசு பரிசீலித்து வருகிறது என கூறினார். தொடர்ந்து பேசிய அவர், இந்த கூட்டத்தில் உள்ள விவசாயிகள் அனைவரையும் முதல்வராகவே பார்க்கிறேன் என முதலமைச்சர் பெருமிதம் தெரிவித்தார்.