“வாய் தவறி பேசிவிட்டேன்” – நடிகை மீரா மிதுன் ஜாமீன் கோரி மனு..!
வாய்தவறி பட்டியலின சமுதாயத்தைப் பற்றி பேசி விட்டதாக,நடிகை மீரா மிதுன் ஜாமீன் கோரி கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
பட்டியலினத்தவர்களை அவதூறாக பேசியது தொடர்பாக நடிகை மீரா மிதுன் மீது,விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி வன்னியரசு புகாரின் அளித்தார்.இதனையடுத்து,மீரா மிதுன் மீது சென்னை சைபர் க்ரைம் போலீசார் வன்கொடுமை தடை சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.அதன்பின்னர்,அவரை கேரளாவில் சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.தற்போது அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.மேலும்,அவரது நண்பர் ஷாம் அபிஷேக்கும் கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து,நீதிமன்ற காவலில் உள்ள நடிகை மீரா மிதுன் காவல்துறையினரின் விசாரணைக்கு ஒத்துழைக்காமல், மாற்றி மாற்றி பேசி வருவதாக தகவல் வெளியாகியது. இதனால் மன நல ஆலோசகர் முன்னிலையில் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற சைபர் கிரைம் போலீசார் முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டது.
இதற்கிடையில்,அவரது யூடியூப் சேனலை முடக்க யூடியூப் நிறுவனத்துக்கு சைபர் கிரைம் போலீசார் கடிதம் எழுதியுள்ளனர்.இதனால்,விரைவில் மீரா மிதுனின் யூடியூப் சேனல் முடக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில்,நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் ஷாம் அபிஷேக் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
மேலும்,அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:
“என்னைப் பற்றி அவதூறாக செய்தி பரப்பியதால் ஏற்பட்ட மன உளைச்சலால், கண்டனம் தெரிவிக்கும் வகையில் பேசியபோது, வாய்தவறி பட்டியலின சமுதாயத்தைப் பற்றி பேசி விட்டேன்.
மேலும்,பல படங்களில் நடிப்பதற்கு கால்ஷீட் கொடுத்துள்ள நிலையில் தன்னை சிறையில் அடைத்துள்ளதால் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது”,என்று தெரிவித்துள்ளார்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.