கூட்டணி தொடர்பாக யாரையும் ஒருமையில் பேசவில்லை – வருத்தம் தெரிவித்த துரை முருகன்
கூட்டணி தொடர்பாக யாரையும் ஒருமையில் பேசவில்லை என்று துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறுகிறது.இதற்காக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றது. இதனிடையே வேலூா் மாவட்டத்தில் காட்பாடி ஒன்றியம், வண்டரந்தாங்கல் கிராமத்தில் நடந்த கிராம சபைக் கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையில் நடைபெற்றது. கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன், தேர்தல் நேரத்தில் கூட்டணியில் உள்ள கட்சிகள் வெளியிலும் செல்லலாம், பிற கட்சிகள் கூட்டணியில் வந்தும் சேரலாம் . வேட்பு மனுவை திரும்ப பெற்ற பிறகு தான் யார், யார் கூட்டணியில் உள்ளார்கள் என்பது தெரியும் என தெரிவித்தார். ஆனால் கூட்டணி கட்சியினரை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் ஒருமையில் பேசியது ஏற்புடையதல்ல, என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார்.இதனால் திமுக கூட்டணியில் சற்று சலசலப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக கூட்டணியில் யார் யார் இருப்பார்கள் ? என்று செய்தியாளர்கள் கேள்வி கேட்டார்கள்.அதற்கு ,” இப்பொழுது எதையும் அறுதியிட்டு , அறுதியிட்டு சொல்ல முடியாது.தேர்தல் காலங்களில் இறுதி நேரத்தில்கூட கட்சிகள் இடம் மாறுவது உண்டு.அப்படி,இங்கே இருப்பவர்கள் அங்கே போவதும்,அங்கே இருப்பவர்கள் இங்கே வருவதுங்கூட கடந்த காலங்களில் நடைபெற்றிருக்கிறது “என்று தான் நான் கூறினேன். வாயில் ,’ மாஸ்க் ‘ அணிந்து பேசியதால் சில வார்த்தைகள் தவறுதலாக வந்திருக்கலாம்.கூட்டணி தொடர்பாக யாரையும் ஒருமையில் பேசவில்லை.யாருடைய உள்ளமாவது வருத்தப்பட்டிருந்தால் அதற்காக மிகவும் வருத்தப்படுகிறேன்.இருந்தாலும் ,இனி இப்படி நிகழா வண்ணம் நானும் நடந்து கொள்வேன் என்று தெரிவித்துள்ளார்.