எந்த பொறுப்பிற்கும் எனக்கு ஆசை இல்லை – திமுக எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின்!
நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிப்பெற அனைவரும் பாடுபட வேண்டும் என கோவையில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு.
கோவை காளப்பட்டியில் கழக உறுப்பினர் சேர்ப்பு முகாமை, கழக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் இன்று துவக்கி வைத்தார். இதன் பின் பேசிய அவர், கோவையில் சிறப்பான வரவேற்பை பார்க்க முடிந்தது. கடந்த சட்டமனற்ற தேர்தலின்போது இங்கு 2 நாட்கள் தங்கியிருந்து பணியாற்றியதாகவும் தெரிவித்தார்.
கோவை மக்களுக்கு குசும்பு மட்டும் இல்லை, சில நேரங்களில் ஏமாற்றியும் விடுகிறீர்கள். சட்டமன்ற தேர்தலில் 10 தொகுதியில், 5 தொகுதியாவது வெற்றி பெறுவோம் என நினைத்தேன். ஆனால், ஒரு தொகுதி கூட ஜெயிக்கவில்லை, கோவை மக்கள் ஏமாற்றி விட்டீர்கள் என்று கூறினார். நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிப்பெற அனைவரும் பாடுபட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
மேலும், தலைவர் இப்போது 2 கோடி புதிய உறுப்பினரை சேர்க்க வேண்டும் என கூறியுள்ளார் என தெரிவித்தார். இதைத்தொடர்ந்து பேசிய உதயநிதி, அமைச்சர் அல்லது துணை முதலைமச்சர் பதவி தரவேண்டும் கட்சியினர் கூறி வந்தாலும், நான் எந்த பொறுப்புக்கும் ஒருநாளும் ஆசைப்படவில்லை. தலைவருக்கும், உங்களுக்கும் ஒரு பாலமாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன் என்றார்.