“உங்களை நம்பி வந்து இருக்கிறேன்”…கூடிய 13 லட்சம் தொண்டர்கள்…த.வெ.க தலைவர் விஜய் நெகிழ்ச்சி!!
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு இன்று விக்ரவாண்டி வி.சாலையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், மொத்தம் 13 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
விழுப்புரம் : த.வெ.க மாநாடு இன்று நடைபெறுவதை முன்னிட்டு இந்த அளவுக்கு கூட்டம் வருமா? என பலரையும் வியக்க வைக்கும் வண்ணம் தவெக தொண்டர்கள் கூட்டம் இன்றுஅலைமோதியது. இன்று அதிகாலை முதலே பலரும் கூட்டம் கூட்டமாக மாநாடு நடைபெறும் இடத்திற்கு வந்தனர். காலை 9 மணி நிலவரப்படி 1.50 லட்சம் மக்கள் கூடியதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.
அதனைத்தொடர்ந்து மாநாடு நடைபெறும் நேரம் நெருங்க நெருங்கமாநாட்டிற்கு வருவோரின் எண்ணிக்கையும் அதிகமாகிக்கொண்டிருந்தது. குறிப்பாக, மாநாடு தொடங்கியவுடன் காவலர்கள் கொடுத்த தகவலின் படி, 8 லட்சம் பேர் வருகை தந்ததாகவும், அதன்பிறகு மாநாடு வெற்றிகரமாக முடிந்த போது வெளியான கணக்கின் படி மொத்தமாக 13 லட்சத்தி 80 ஆயிரம் பேர் பங்கேற்றதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
ஏற்கனவே, மாநாடு நடைபெறுவதற்கு முன்பு த.வெ.க தலைவர் விஜய்யும் கர்ப்பிணி பெண்கள், வயதானவர்கள், குழந்தைகள், யாரும் மாநாட்டுக்கு வர வேண்டாம். வீட்டில் இருந்து பார்க்கும்படி அறிவுறுத்தி இருந்தார். எனவே, விஜயின் அறிவுரை கேட்டும் பலர் வரவில்லை. மேலும் பலருக்கு குறிப்பிட்ட காரணங்களால் வரமுடியாத சூழ்நிலையில் இருந்தவர்கள் பலர் வீட்டில் இருந்தே மீடியாக்கள் மூலம் ஒளிபரப்பு செய்யப்பட்ட நேரலையில் தவெக முதல் மாநில மாநாட்டை பார்த்தனர்.
குறிப்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் கூட மாநாடு நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதே போல மற்ற தளங்களால் மொத்தமாக, நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டதை பார்த்தவர்கள் எண்ணிக்கை குறித்த விவரமும் வெளியாகி இருக்கிறது.
- த.வெ.க யூடியூபில் – 6 லட்சத்தி 75-ஆயிரம் பேர்
- சன் செய்திகள் – 67 ஆயிரம்
- பாலிமர் நியூஸ் -2 லட்சத்து 9ஆயிரத்து 600 பேர்
- நியூஸ் 18 – 1 லட்சத்து 33ஆயிரம் பேர் பார்த்தனர்.
ஒருவேளை வீடியோ காட்சிகள் மூலம் பார்த்த இவ்வளவு பேர் மாநாட்டிற்கு வந்திருந்தால் கண்டிப்பாக இதுவரை தமிழக வரலாற்றில் அதிக மக்கள் கூட்டம் கூடி நடைபெற்ற மாநாடு என்ற சாதனையையும் தமிழக வெற்றி கழகம் மாநாடு படைத்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
மேலும், விஜய் மாநாடு நடைபெறும் போது நேரில் வர முடியாத தொண்டர்கள் குறித்துப் பேசினார். இது குறித்துப் பேசிய அவர் ” இங்கு வந்து இருப்பவர்கள் மட்டும்தான் நம்மளுடைய உறவினர்கள் இல்லை… இவர்கள் மட்டும் தான் நமது தொண்டர்கள் இல்லை…இங்குக் கூடி மாநாட்டைப் பார்த்துக் கொண்டு இருப்பது போல மாநாட்டிற்கு வர முடியாமல் வீட்டிலிருந்து வீடியோ காட்சிகள் மூலமாக மாநாட்டை ரசித்துக் கொண்டிருக்கிறார்கள்” எனப் பேசி இருந்தார்.
மேலும், “திரையுலகில் உச்ச நடிகராக இருந்து, அந்த வருமானத்தை விட்டு தற்போது உங்களுக்காக , உங்களை நம்பி அரசியலுக்கு வந்திருக்கிறேன்” என உருக்கமாகத் தனது பேச்சில் தவெக தலைவர் விஜய் குறிப்பிட்டுப் பேசியிருந்தார்.