எந்த கருத்தையும் சொல்ல விரும்பவில்லை – அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி!

தமிழகத்தில் அதிமுக – பாஜக இடையே ஏற்பட்ட தொடர் மோதலை தொடர்ந்து, தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிக்கொள்வதாக அதிமுக அறிவித்தது. கூட்டணியில் இருந்துகொண்டு கூட்டணி கட்சியில் இருக்கும் தலைவர்களை பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சிக்கும் போக்கு அதிமுகவினர் மத்தியில் தொடர் எதிர்ப்புகளை பெற்று வந்தது.
இதற்கு தீர்வு காண பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், அதிமுகவின் கோரிக்கையை பாஜக மேலிடம் நிராகரித்ததாக தகவல் வெளியானது. இதனால், அதிமுக – பாஜக கூட்டணி முறிந்தது என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. 2024 நாடாளுமன்ற தேர்தல் மட்டுமல்ல, 2026 சட்டமன்ற தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்றும், இதனால் எந்த பிரச்சனை வந்தாலும் அதனை சந்திக்க தயார் எனவும் பொதுச்செயலாளர் எடப்பாடி பேசியுள்ளதாகவும் தகவல் வெளியாகி இருந்தது.
கூட்டணி முறிந்து விட்டதால் யாரும் பாஜகவை கடுமையாக விமர்சிக்க கூடாது. மற்ற கட்சிகளுடன் கூட்டணி பற்றி பேசும் வரை கட்சி நிர்வாகிகள் அமைதி காக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது. கூட்டணி முறிவு குறித்து பாஜகவும் எந்த கருத்தும் சொல்லவில்லை. இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அதிமுக அமைச்சர் ஜெயக்குமார், அதிமுகவில் எந்த குழப்பமும் இல்லை, தெளிவான நிலைப்பாடே எடுத்து இருக்கிறோம்.
பாஜக குறித்தோ, அண்ணாமலை குறித்தோ எந்த கருத்தையும் சொல்ல விரும்பவில்லை. அதிமுக நிலைப்பாடு குறித்து அறிவிக்கப்பட்டுவிட்டது. மேற்கொண்டு எதையும் பேச விரும்பவில்லை. கூட்டணி முறிவுக்கு பின்னர் பாஜக குறித்து அதிமுகவும், அதிமுக குறித்து பாஜகவும் எந்த கருத்தும் தெரிவிக்காமல் நிர்வாகிகள் மவுனம் காத்து வந்த நிலையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும், தேர்தல் நெருங்கும்போது கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும். அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு புதிய பெயரா? என கேள்விக்கு, தேர்தல் நெருங்கும்போது கட்சி தலைமை, பொதுச்செயலாளர் முடிவெடுப்பார் எனவும் பதிலளித்தார்.