“என்னால் பிரச்னை வேண்டாம் என நினைக்கிறேன்” – துரை வைகோ.!
என்னால் கட்சிக்கோ, தலைமைக்கோ எந்த களங்கமும் ஏற்படக் கூடாது என நினைக்கிறேன், மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளேன் என்று துரை வைகோ கூறியிருக்கிறார்.

சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ இன்று அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு கட்சி நிர்வாகிகள் மற்றும் தலைவர் வைகோவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
துரை வைகோ 2021 அக்டோபர் மாதம் மதிமுகவின் தலைமைக் கழகச் செயலாளராகப் பொறுப்பேற்று, பின்னர் பொதுக்குழுவில் முதன்மைச் செயலாளராக உயர்ந்தவர். அவர் தனது விலகல் முடிவுக்கு காரணம் குறித்து அறிக்கையில், கட்சிக்கும் தலைமைக்கும் பாதிப்பு ஏற்படுத்தி வரும் ஒரு நபரின் செயல்களை குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தலைமைக் கழகத்தின் முக்கிய முடிவுகள் எடுக்கும் கூட்டங்களில் இனி பங்கேற்க மாட்டேன் எனவும், கட்சியை சிதைக்கும் மறைமுக செயல்களில் ஈடுபடும் நபரால் தனக்கு அவப்பெயர் ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், சென்னையில் செய்தியார்களை சந்தித்து பேசுகையில், ”என்னால் கட்சிக்கோ, தலைமைக்கோ எந்த களங்கமும் ஏற்படக் கூடாது என நினைக்கிறேன். மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளேன். இது உள்கட்சி விவகாரம், வெளியில் விவாதிக்க முடியாது. பதவியில் இருப்பதால்தான் பிரச்சினை வருகிறது, தொண்டனாக தொடர்வேன். தேர்தல் அரசியல் எனக்கு வேண்டாம், விருப்பம் இல்லை.
என்னால் பிரச்னை வேண்டாம் என நினைக்கிறேன், கட்சியில் தொண்டனாகவே இருக்க விரும்புகிறேன், நிர்பந்தத்தாலேயே அரசியலுக்கு வந்தேன், தொண்டர்கள், நிர்வாகிகள் விருப்பத்தின்பேரிலேயே நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டேன். மதிமுக நிர்வாகக் குழு கூட்டத்துக்குப் பின் முழுமையான விடை கிடைக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.