லண்டன் சென்று வந்த பிறகு அண்ணாமலைக்கு என்ன ஆனது எனத் தெரியவில்லை-திருமாவளவன் பேச்சு!
பரபரப்பு அரசியலை விரும்பும் அண்ணாமலை விரும்புவதாக கோவையில் விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. பேட்டி கொடுத்துள்ளார்.
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து ஞானசேகரன் என்பவரை கைது செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது.
அண்ணாமலை
இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் இதற்கு கண்டனத்தை தெரிவித்து கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிக்கு உரிய தண்டனை கிடைக்கவேண்டும் என பேசி வருகிறார்கள். குறிப்பாக, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் செய்தியாளர்களை சந்தித்தபோது ” பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அடிப்படைக் கடமையிலிருந்து திமுக தவறியுள்ளது .
திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும்வரை நான் இனிமேல் செருப்பு அணிய மாட்டேன். நாளையில் இருந்து 48 நாட்கள் நான் விரதம் இருந்து முருகனிடம் முறையிடவும் முடிவெடுத்துள்ளேன். அதைப்போல, திமுக அரசுக்கு எதிராக சாட்டையால் அடித்துக் கொள்ளும் போராட்டமும் நாளை நடத்தப்படும். நாளை காலை 10 மணிக்கு என்னுடைய வீட்டிற்கு வெளியே எனக்கு நானே 6 முறை சாட்டையால் அடித்துக் கொண்டு போராட்டம் நடத்துவேன்” என காட்டத்துடன் பேசியிருந்தார்.
திருமாவளவன்
இந்நிலையில், கோவையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவனிடம் செய்தியாளர்கள் அண்ணாமலை திமுகவை விமர்சித்து பேசியது குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த திருமாவளவன் ” லண்டன் போயிட்டு வந்த பிறகு அண்ணாமலை ஏன் இப்படி ஆனார் என தெரியவில்லை. அவர் எதற்காக இந்த மாதிரி முடிவெடுக்கிறார் என்பது எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது.
தன்னை தானே வருத்திக்கொள்ளும் அகிம்சா வழி போராட்டத்தை கையில் எடுக்குகிறார். காந்தியடிகள் கூட இந்த மாதிரி போராட்டத்தை அறிவித்தது இல்லை. தன்னை தானே சவுக்கால், சாட்டையால் அடித்து கொள்வதாக அண்ணாமலை அறிவித்துள்ளது அதிர்ச்சியாக இருக்கிறது. அவருடைய போராட்ட அறிவிப்புகள் நகைப்புக்குரியதாக மாறிவிடக்கூடாது.
அவர் பரபரப்பான அரசியலை செய்ய விரும்புகிறார். எதிர்க்கட்சி அதிமுக இல்லை…பாஜக தான் எதிர்க்கட்சி என்பது போல காட்டுவதற்காக இப்படி பேசிக்கொண்டு இருக்கிறார்” எனவும் திருமாவளவன் பேசினார். தொடர்ந்து பேசிய திருமாவளவன் ” அண்ணா பல்கலைக்கழக விவகாரம் வேதனைக்குரியது. குற்றவாளி கைது செய்யப்பட்டது ஆறுதல் அளிக்கின்றது.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிக்கு விரைந்து உரிய தண்டனையை காவல்துறை பெற்று தர வேண்டும். அவருக்கு பிணை வழங்கக்கூடாது. எப்.ஐ.ஆர். இல் இருந்த மாணவியின் விவரங்கள் வெளியாகி இருக்கக் கூடாது. அவ்வாறு வெளியாகியுள்ளது ஏற்புடையது அல்ல. எனவே இத்தகைய செயல் கண்டனத்திற்குரியது. அதற்குக் காரணமானவர்கள் யார் என்பதைக் கண்டறிந்து காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனவும் திருமாவளவன் தெரிவித்தார்.