எனக்கு அரசியல் தெரியாதா.? விமர்சகர்களுக்கு தவெக தலைவர் விஜயின் ‘பக்கா’ பதில்.!
நாங்கள் பேருக்கு அரசியல் கட்சி துவங்கியவர்கள் கிடையாது என்பது இந்த மாநாடு வெற்றிகரமாக முடியும் போது அவர்களுக்கு தெரியும் என விமர்சகர்களுக்கு தவெக தலைவர் விஜய் பதிலளித்துள்ளார்.
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநாடு வரும் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.வி.சாலையில் மிக பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இதற்கான கால் நட்டுதல் விழா இன்று அதிகாலை நடைபெற்று, மாநாடு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
தவெக கட்சியின் முதல் மாநாட்டிற்கு அறிக்கை மூலம் அழைப்பு விடுத்துள்ளார் அக்கட்சி தலைவர் விஜய். அந்த அறிக்கையில், கட்சி ஏன் தொடங்கப்பட்டது.? தொண்டர்களுக்கான அறிவுரை, ஆகியவை குறிப்பிட்டு தனது அரசியல் பயணம் பற்றி விமர்சனம் செய்தவர்களுக்கும் அந்த அறிக்கை மூலம் பதிலளித்துள்ளார் விஜய்.
விஜய் மீதான விமர்சனங்கள் :
திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் போதே அதற்கு முழுதாக ஓய்வு (இன்னும் ஒரு படம் மீதம் இருக்கிறது) கொடுத்துவிட்டு முழு நேர அரசியலில் கால் பாதிக்க உள்ளதாக அறிவித்தார் விஜய். அப்போது இருந்தே, சினிமா நடிகர்கள் அரசியலுக்கு வருவதும் சாதாரண விஷயம். அவர்களால் அரசியலில் பெரிய அளவுக்கு சாதிக்க முடியாது. விஜய் நீண்ட காலம் அரசியலில் இருக்க மாட்டார். 2026 தேர்தலுக்கு பிறகு மீண்டும் சினிமாவுக்கு வந்துவிடுவார் என்றெல்லாம் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.
விமர்சனமும்., அட்வைஸும்.,
இந்த விமர்சனங்களுக்கு எல்லாம் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் நேரடியாகவே பதில் அளித்துள்ளார் விஜய். ‘ இன்னும் நாட்டு மக்களுக்கு அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்பட வில்லை’ எனும் அரசுகள் மீதான விமர்சனங்கள், ‘ராணுவ கட்டுப்பாடுடன் மாநாட்டில் தொண்டர்கள் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும்’ என தொண்டர்களுக்கு அட்வைஸ் கூறிய விஜய், தன் மீதான விமர்சனங்களுக்கும் அதில் பதிலளித்துள்ளார்.
பேருக்கு நாங்கள் அரசியல் கட்சி தொடங்கவில்லை.,
அதில், ” இவர்களுக்கு அரசியல் என்றால் என்னவென்று தெரியுமா? மாநாடு என்றால் என்னவென்று தெரியுமா? களத்தில் தொடர்ச்சியாக நின்று வென்று காட்ட இயலுமா? இப்படி ஏகப்பட்ட கேள்விகளை நம் மீது சிலர் வீசுகின்றனர். மாநாட்டை வெற்றிகரமாக நடத்திக் காட்டும்போதுதான் அவர்களுக்குப் புரியும். தமிழக வெற்றிக் கழகம் ஏதோ பேருக்கு அரசியலுக்கு வந்த கட்சி அன்று.
வீறு கொண்டு எழுந்து அரசியல் களத்தில் வெற்றி காணப் போகின்ற கட்சி என்பதை நம்மை எடைபோடுவோரும் புரிந்துகொள்வர். மக்கள் இயக்கமாக இருந்த நாம், மக்களோடு மக்களாக நின்று களமாடி, அரசியல் உரிமைகளை வென்றெடுக்கப் போகும் இயக்கமாக மாறிவிட்டோம்.
அரசியல் களப் பணிகள் வேறு. அதற்கான நடைமுறைகள் வேறு. ஆம். அரசியல் களத்தில் வேகமாக இருப்பது எவ்வளவு முக்கியமோ. அதைவிட முக்கியம் விவேகமாக இருப்பது. மேலும், யதார்த்தமாக இருப்பதைவிட எச்சரிக்கையுடன் களமாடுவது இன்னும் அவசியம். இவை அனைத்தையும் உள்வாங்கி, உறுதியோடும் உற்சாகத்தோடும் உத்வேகத்தோடும் மாநாட்டுப் பணிகளைத் தொடங்கித் தொடர்ந்து செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.” என விஜய் பதிவிட்டுள்ளார்.
களத்தில் நிற்போம் :
இதில் குறிப்பிட்டு பார்க்க வேண்டிய தகவல்கள் என்னவென்றால், ‘களத்தில் தொடர்ச்சியாக நின்று வென்று காட்ட இயலுமா?’ என்ற விமர்சனத்திற்கு பதில் அளிப்போம் என கூறியுள்ளார். 2026க்கு பிறகு விஜய் நடிப்புக்கு திரும்புவார் என்ற விமர்சனத்திற்கு பதில் அளித்துள்ளார் என்று கூறப்படுகிறது. ‘ யதார்த்தமாக இருப்பதைவிட எச்சரிக்கையுடன் களமாடுவது இன்னும் அவசியம். ‘ என தனது தொண்டர்களுக்கு அரசியல் அட்வைஸ் கூறுவதையும் விஜய் தவறவில்லை.
தனது கட்சியின் கொள்கை , விரைவில் சட்டமன்ற தொகுதி கட்சி நிர்வாகிகள் அறிவிக்கப்படுவார்கள். அனைவரும் ஒற்றுமையுடன் செய்லபட வேண்டும் என பல்வேறு அரசியல் தகவல்களை தனது அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளார் தமிழக வெற்றிக் கழக கட்சித் தலைவர் விஜய்.