கட்சி பார்த்து செய்யவில்லை, கஷ்டத்தை பார்த்துதான் செய்தேன் – முதல்வர் பழனிசாமி
கட்சி பார்த்து கடனை தள்ளுபடி செய்யவில்லை, கஷ்டத்தை பார்த்துதான் தள்ளுபடி செய்தேன் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மணவாளன் நகர் பகுதில் விவசாயிகள் மற்றும் நெசவாளர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய முதல்வர் பழனிசாமி, அதிமுக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. நாட்டுக்கு உணவு அளிக்கிறவர்கள் விவசாயிகள். வெயில், மழை, இரவு, பகல் எதையும் பார்க்காமல் நாட்டுக்காக உழைத்து, உணவு உற்பத்தியை பெருக்கி வருகிறார்கள்.
விவசாயிகளுக்கு இன்னல்கள் வரும்போது எல்லாம், தமிழக அரசு அதனை சரி செய்து கொடுக்கிறது என்று உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே, இடுக்கண் களைவதாம் நட்பு என்று குறளை சுட்டிக்காட்டி பேசியுள்ளார். நானும் ஒரு விவசாயி, இப்போதும் வேளாண் செய்து வருகிறேன். நான் விவசாயி என்று சொன்னால், முகஸ்டாலின் கோவமடைகிறார். முக ஸ்டாலின் பல்வேறு கூட்டங்களில் பேசும்போது, ரவுடி தான் தன்னை ரவுடி ரவுடி என்று சொல்லிக்கொள்வார்.
அதைபோல், முதல்வர் பழனிசாமி எந்த கூட்டத்திற்கு சென்றாலும் தன்னை விவசாயி விவசாயி என்று கூறிக்கொள்கிறார் என்று ஸ்டாலின் கூறியதாக முதல்வர் தெரிவித்துள்ளார். ரவுடியும், விவசாயும் ஒன்றா? என்று கேள்வி எழுப்பிய முதல்வர், ரவுடி வேறு, விவசாயி வேறு, இது ஒரு கீழ்த்தனமான எண்ணம். எதை பேசுவதென்று கூட தெரியாத தலைவர், திமுக தலைவர் முக ஸ்டாலின் தான் என விமர்சனம் செய்துள்ளார். இரு தினங்களுக்கு முன்பு கூட்டுறவு வங்கியில் வாங்கிய பயிர் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தேன்.
இதுகுறித்து இன்று பேசிய முக ஸ்டாலின், விவசாயிகள் எல்லாரும் அதிமுகவை சேர்ந்தவர்கள், அதனால் தான் பயிர் கடனை தள்ளுபடி செய்துள்ளார் என்று பேசியுள்ளார். ஸ்டாலின் மனக் குழப்பத்தில் இருப்பதால் இப்படி பேசி வருகிறார். கட்சி பார்த்து கடனை தள்ளுபடி செய்யவில்லை, கஷ்டத்தை பார்த்துதான் தள்ளுபடி செய்தேன் என்று முதல்வர் குறிப்பிட்டுள்ளார். இதனை ஸ்டாலின் உணர வேண்டும், பொய்யான கருத்துக்களை தெரிவிக்க கூடாது என முதல்வர் தெரிவித்துள்ளார்.