இரவு முழுவதும் எனக்கு தூக்கமே வரவில்லை.! முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் உரை!
முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என முதலமைச்சர் ஸ்டாலின் உரை.
சென்னை கிறித்துவ கல்லூரி மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தாம் பயின்ற பள்ளியில் முன்னாள் மாணவராக பங்கேற்று பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நான் கோபாலபுரத்தில் இருந்தபோது, பள்ளிக்கு பேருந்தில் தான் வருவேன்.
29சி பேருந்தில் ஏறி ஸ்டெர்லிங் ரோட்டில் இருந்து குறைந்தபட்சம் ஒரு 3 கிமீ நடந்து பள்ளிக்கு வருவேன். நடந்து வருவதற்கு பல காரணங்கள் உண்டு, அதை தற்போது கூற முடியாது. அதெல்லாம் பழைய நினைவு என சிரித்தபடி கூறினார். இதன்பின் பேசிய முதல்வர், நான் பள்ளி செல்லும் போது பந்தா காட்டியதில்லை.
பள்ளி காலத்தில் துள்ளி திரிந்தேன். தற்போது படித்த பள்ளிக்கு செல்ல வேண்டும் என்ற மகிழ்ச்சியில் இரவு முழுவதும் எனக்கு தூக்கமே வரவில்லை. முதலமைச்சரை இங்கு வரவில்லை, ஒரு மாணவனாக வந்துள்ளேன். அரசியலுக்கோ, கட்சிக்கோ, முதலமைச்சராகவோ நான் வருவேன் என்று நினைத்து பார்க்கவில்லை.
மாணவ பருவம் என்பது யாருக்கும் திரும்ப கிடைக்காத காலம். தமிழை நீங்கள் சாதாரணமாக கற்று தரவில்லை, அடித்து அடித்து கற்று தந்தீர்கள். எனது தமிழ் ஆசிரியர் ஜெயராமனை பார்க்கும்போது ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே என பாட தோன்றுகிறது. நான் பெரிய அளவில் உயர்த்ததற்கு எம்.சி.சி பள்ளியும் ஓரு காரணம். ஒரு பள்ளியில் இருந்து மருத்துவர், பொறியாளர், வழக்கறிஞர் உருவாகி இருப்பார்கள். முதலமைச்சரை உருவாக்கிய பெருமை எம்.சி.சி பள்ளிக்கு உள்ளது.
எங்களை எல்லாம் படிக்க வைக்க பொறுப்பேற்றவர் என்னுடைய மாமா முரசொலி மாறன். மேயராக இருந்தபோதும், எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோதும் எம்.சி.சி பள்ளி நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளேன். தற்போது முதலமைச்சர் என்ற முறையில் எம்.சி.சி பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என முதலமைச்சர் பழைய நினைவுகளை நினைவு கூர்ந்து பேசினார்.