அனுமதி தானே கேட்டேன் நான் செய்தது தவறா? – ஆவேசமான வேல்முருகன்!
அமைச்சர் சேகர் பாபு அதிமுகவுக்கு ஆதரவாக நடந்துகொள்கிறார் என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் (தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர்) வேல்முருகன் செயல்பாடு அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்துள்ளது. சட்டப்பேரவையில், சாதிவாரி கணக்கெடுப்பு விவாதத்தின் போது வேல்முருகன் ஆவேசமாகி பேரவையில் ஆளுநர் செல்லும் பாதையில் சபாநாயகரை நோக்கி நடந்துவந்து கோஷமிட்டதாவும், அமைச்சர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
மற்ற மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசுகளே நடத்துகின்றன. ஆனால், தமிழக அரசு ஏன் நடத்தவில்லை என வேல்முருகன் கேள்வி எழுப்பியிருந்தார். இதன் காரணமாக, வேல்முருகன் செய்கையை குறிப்பிட்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவையில் வேல்முருகன் அதிகப்பிரசங்கி தனமாக நடந்து கொள்கிறார். அவர் மீது சபாநாயகர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பரபரப்பு குற்றசாட்டை வைத்தார்.
அதைப்போல, அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பிஉதயகுமார் இதற்கு சட்டப்பேரவையில் கண்டனம் தெரிவித்த நிலையில், சட்டப்பேரவை அவைகுறிப்பில் இருந்து வேல்முருகன் பேச்சு நீக்கம் செய்யப்பட்டதாகவும், இனிமேல் இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என அப்பாவு எச்சரிக்கவும் செய்தார்.
இதனை தொடர்ந்து சட்டப்பேரவைக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த வேல்முருகன் ” நான் என்ன சொல்ல வருகிறேன் என்பதை புரிந்து கொள்ளாமலேயே அதிமுக உறுப்பினர்கள் எழுந்து கத்துகிறார்கள். அங்கு அமைச்சரவையில் இருக்கின்ற சேகர்பாபு போன்ற அமைச்சர்கள் கத்தினார்கள். இதன் காரணமாக தான் நான் நான் முன்னோக்கி சென்று சபாநாயகரிடம் முறையிட்டேன். அந்த சமயம் சேகர் பாபு என்னிடம் ஒருமையில் பேசினார்.
உடனடியாக அப்படி என்னிடம் பேசக்கூடாது என அவரிடம் சொன்னேன் ஆனால் நான் இருக்கைக்கு வந்தபின், சேகர் பாபு தவறான தகவலை சொல்லிவிட்டார். அமைச்சர் சேகர்பாபு அதிமுகவில் இருந்து வந்தவர் என்பதால் அதிமுகவை காப்பாற்றுவதற்காக என்னுடைய மீது குற்றத்தை சாட்டி பேசினார். நான் எந்த விதமான வம்பு தும்புகள் செய்யவில்லை. என்னுடைய தாய்மொழி தமிழ் குறித்து பேசியதில் அவர்களுக்கு என்ன பிரச்சினை வந்தது என்று தெரியவில்லை.
தாய் மொழி குறித்து பேசும்போது துணை முதல்வர், முதல்வர் என பலரும் இருக்கிறார்கள் அவர்களுக்கு வராத கோபம் சேகர் பாபுவுக்கு எதற்காக வருகிறது? இடஒதுக்கீடு பற்றி நான் பேசியதில் உங்களுக்கு என்ன பிரச்சனை? எந்த பிரச்சினை பற்றி யாருக்காக பேசுகிறேன் என்று தெரியாமல் என்னுடைய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தது எனக்கு வேதனை அளிக்கிறது.
சட்டத்திற்கு புறம்பாக நான் அப்படி என்ன பேசிவிட்டேன்? சபாநாயகர் இருக்கையின் முன்பு நின்று பேச அனுமதி கொடுங்கள் என கேட்டது தவறா? அனுமதி கேட்டதற்கு சேகர்பாபு என்னை எதற்கு எடுத்தாலும் முந்திகொள்கிறீர்கள் என ஒருமையில் பேசுகிறார். அது மட்டுமின்றி, சேகர்பாபு தவறான தகவலை, முதலமைச்சருக்கு சொல்லி உள்ளார். அதனை அப்படியே முதலமைச்சர் சட்டப்பேரவையில் தெரிவித்தது வருத்தமாக இருக்கிறது” எனவும் வேல்முருகன் சற்று ஆவேசத்துடன் பேசியுள்ளார்.