ஒட்டுமொத்த அதிமுக முடிவுக்காக காத்திருக்கிறேன் – டிடிவி தினகரன்
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், கட்சியில் சேர்ப்பது தொடர்பாக அதிமுகவும் என்ன முடிவெடுக்கிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும், அதிமுக முடிவுக்காக காத்திருக்கிறேன். அமமுக தொண்டர்களின் முடிவுதான் என்னுடைய முடிவு. தனிப்பட்ட முறையில் என்னால் எந்த முடிவும் எடுக்க முடியாது. நாங்கள் தவறு செய்யவில்லை. சுயபரிசோதனை செய்ய வேண்டிய இடத்தில் இருப்பதால் அதிமுகவின் குரல் ஒலிக்க தொடங்கியுள்ளது என்றும் கூறியுள்ளார்.
தேனி மாவட்ட நிர்வாகிகள் சுயபரிசோதனை செய்து தீர்மானம் நிறைவேற்றியிருக்கலாம். சுயபரிசோதனை செய்ய வேண்டிய இடத்தில் அதிமுகவினர் இருக்கிறார்கள். அதன் விளைவு தான் அதிமுக நிர்வாகிகள் தீர்மானம். அம்மாவின் ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் கொண்டுவருவதுதான் அமமுகவின் லட்சியம்.அம்மாவின் ஆட்சியை கொண்டு வர எனது சுவாசம் உள்ளவரை போராடுவேன். ஒட்டுமொத்த அதிமுகவும் ஏற்றுக்கொண்டால் எனது தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் கலந்து ஆலோசித்து முடிவை அறிவிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் உள்ளிட்டவைகளில் தொடர் படுதோல்வி அடைந்து வந்த நிலையில், கட்சியை உடனே ஒருங்கிணைக்க வேண்டும் என்று அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களில் கருத்து கூறி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் சசிகலா மற்றும் டிடிவி தினகரனை மீண்டும் அதிமுகவில் சேர்த்து கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்த வண்ணம் உள்ளது.
அந்த வகையில், சசிகலா, தினகரனை அதிமுகவில் மீண்டும் இணைக்க வலியுறுத்தி தேனி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் நேற்று தீர்மானம் நிறைவேற்றினர். கட்சி நிர்வாகிகளின் கோரிக்கையை கேட்ட அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இதுதொடர்பாக தேனி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் சார்பாக வரும் 5-ஆம் தேதி கூடி தீர்மானம் நிறைவேற்றி, தலைமைக்கு அனுப்பும்படி ஓபிஎஸ் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.