நேற்றில் இருந்து நான்தான் உங்களுக்கு “தலைப்பு செய்தி”.. அமைச்சர் உதயநிதி பேட்டி!
இல்லத்தரசிகளுக்கு ரூ.1000 அறிவிப்பு எப்போது என்று முதல்வர் அறிவிப்பார் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி.
தமிழக அமைச்சரவையில் 35-ஆவது அமைச்சராக நேற்று சட்டமன்ற உறுப்பினரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றார். உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சரவையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது. அமைச்சராக பொறுப்பேற்ற உடனே விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு உள்ளிட்ட 3 முக்கிய கோப்புகளில் உதயநிதி ஸ்டாலின் நேற்றே கையெழுத்திட்டார்.
முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் அமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலின் தான் நேற்று முதல் ஹாட் டாப்பிக்கே. சிலர் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள், சிலர் திமுகவை வாரிசு அரசியல் என்று விமர்சனம் செய்து வருகிறார்கள். மேலும், அனைத்து விவாதத்திலும் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றது தான் பேசப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், நேரு விளையாட்டு அரங்கத்தில் மாணவர்களுடன் கலந்துரையாடிய பின்னர் இன்று செய்தியாளர்களிடம் பேசிய விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நேற்று முதல் நான்தான் உங்களுக்கு தலைப்பு செய்தி அதாவது ‘content’ என்று செய்தியாளர்களை பார்த்து சிரித்தபடி கேட்டார். பின்னர் தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார்.
இதன்பின் பேசிய அவர், தேர்தல் அறிக்கையில் 234 தொகுதிகளிலும் மினி ஸ்டேடியம் அமைக்கப்படும் என்று கூறியுள்ளோம். இதற்கான பணிகள் தான் எனக்கு முதல் இலக்காக இருக்கும். விளையாட்டுத்துறையில், விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் விதமாக தன்னுடைய பணிகள் இருக்கும். தமிழ்நாட்டில் பீச் ஒலிம்பிக்ஸ், ATP டென்னிஸ் தொடர் நடத்துவதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது.
மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முதல்வரிடம் எடுத்து சென்று நடவடிக்கை எடுக்கப்படும். சிறப்பு திட்டங்களை முதலமைச்சர் தான் அறிவிப்பார் என கூறினார். அதாவது, மாதந்தோறும் இல்லத்தரசிகளுக்கு ரூ.1000 வழங்கப்படுவதற்கான அறிவிப்பு எப்போது என்று முதல்வர் அறிவிப்பார் என அமைச்சர் உதயநிதி குறிப்பிட்டார்.