“தம்பி விஜய்க்கு அண்ணன் இருக்கேன்.. எனக்குத் தான் யாரும் இல்ல” – சீமான்
திருவாரூர் : புதிதாகக் கட்சி தொடங்கிய விஜய்க்காகப் பேசுவதற்கு அண்ணனாக நான் இருக்கிறேன் எனப் பத்திரிகையாளர்களைச் சந்தித்த போது சீமான் பேசி இருக்கிறார்.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி திருக்கொள்ளிக்காடு அருகே அமைந்துள்ள “அருள்மிகு பொங்கு சனீஸ்வரர்” ஆலயத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் இன்று சாமி தரிசனம் செய்தார். அதன் பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழக மீனவர்கள், உக்ரைன் போர் மற்றும் விஜய் கட்சியின் கோடி அறிமுகத்தைப் பற்றியும் சீமான் பேசி இருந்தார்.
தமிழக மீனவர்கள் பற்றிய கருத்து ..!
தமிழக மீனவர்களைப் பற்றிய கேள்வி எழுந்த நிலையில், அது குறித்துப் பேசிய சீமான், ” தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதும், சுடப்படுவதும் ஒரு தொடர் கதையாகவே இருந்து வருகிறது. வலிமையான கடற்படையைக் கையில் வைத்திருக்கும் ஒன்றிய அரசு தமிழக மீனவர்களை ஏன் காக்க மறுக்கிறது? மீனவனின் வாக்குகள் தேவை. ஆனால், அவர்களது உயிரைப் பற்றி எந்த கவலை இல்லை. நாங்கள் ஆட்சியிலிருந்தால் தமிழக மீனவர்களைத் தொட முடியுமா?” என்று கூறினார்.
பிரதமர் மோடியின் உக்ரைன் பயணம் ..!
அதனைத் தொடர்ந்து பிரதமர் மோடியின் உக்ரைன் பயணத்தைப் பற்றி கேள்வி எழுந்தது. அதற்குப் பதிலளித்த சீமான் கூறியதாவது, “ஊர் ஊராய் சுற்றுபவரை நாடோடி என்பார்கள். இவர் நாடு நாடாகச் சுற்றுபவர். மேலும், நரேந்திர மோடி உக்ரைன் நாட்டை இது வரை பார்த்தது இல்லை போல அதற்காகத் தான் சென்றுள்ளார்.
முதலமைச்சர் அமெரிக்கப் பயணம் சென்று பத்தாயிரம் கோடியை முதலீடு ஈர்த்துள்ளதாக முதலமைச்சரும், டி.ஆர்.பி.ராஜாவும் கூறி வருகின்றனர். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல்களைப் பெற்று அதன் மீது வழக்கு தொடருவேன். முதலமைச்சர் ஆல் இந்தியா புரோக்கர், பிரதமர் இண்டர்நேஷனல் புரோக்கர். இவர்கள் தலைவர்கள் அல்ல தரகர்கள்” என்று கூறினார்.
விஜய்க்கு அண்ணனாக நான் இருக்கிறேன்..!
அதன் பின் வரும் 2026-ல் விஜயுடன் கூட்டணி வைப்பீர்களா என்ற கேள்வியைச் சீமானிடம் கேட்ட போது, அதற்குப் பதிலளித்து சீமான் பேசி இருந்தார். அவர் பேசியபோது, “நான் உங்களிடம் இப்படி மாட்டிக் கொள்வதால் என்னிடமே இந்த கேள்வியை நீங்கள் கேட்கிறீர்கள். விஜய் மாநாடு நடத்தி கட்சியை அறிவிக்கும் போது, அவரிடமே இந்தக் கேள்வியை நீங்கள் கேளுங்கள்.
என்னை விமர்சனம் செய்து கொண்டிருந்தவர்கள் தற்போது விஜய்யை விமர்சனம் செய்கின்றனர். எனக்கு விமர்சனங்கள் அலுத்துவிட்டது “தம்பி விஜய்க்காகப் பேச நான் இருக்கிறேன், ஆனால் எனக்காகப் பேசத் தான் யாருமில்லை”. அது தான் இங்க பிரச்னை”, எனச் சீமான் பேசி இருந்தார்.