பாஜக மாநில தலைவருக்கான போட்டியில் நான் இல்லை! அண்ணாமலை பேச்சு!
பாஜக தமிழ்நாடு மாநில தலைவருக்கான தேர்தல் வரும் 12ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை : தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் இன்னும் ஓராண்டில் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை மாற்றப்படுவார் என்ற செய்திகள் வைரலாகி அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்தது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இன்று வெளியாகி இந்த விஷயமானது ட்ரென்டிங் டாப்பிக்காக மாறியுள்ளது.
அதில், பாஜக கட்சியின் அமைப்பு பருவ தேர்தல் காலம் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது. அதில், கிளை தொடங்கி மாவட்டத் தலைவர், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் வரையிலான தேர்தல் முடிந்து தற்பொழுது இறுதியாக மாநிலத் தலைவர் மற்றும் தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்தலுக்கான விருப்ப மனுக்கள் வரவேற்கப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
மாநில தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் படிவம் F-ஐ பூர்த்தி செய்ய வேண்டும் என்றும், மூன்று பருவம் தீவிர உறுப்பினராகவும் மற்றும் குறைந்தது 10 வருடங்கள் பாஜக அடிப்படை உறுப்பினராகவும் உள்ளவர் மாநில தலைவர் பதவிக்கு போட்டியிட தகுதி பெறுவார்கள் என்றும், போட்டியிடும் நபரை கட்சியில் தேர்தெடுக்கப்பட்ட மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் 10 பேர் அவரிடம் இருந்து எழுத்து பூர்வமான ஒப்புதல் பெற்று பரிந்துரைக்க வேண்டும் என்றும் விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து, இதில் ஏற்கனவே தமிழக பாஜக மாநில தலைவராக இருக்கும் அண்ணாமலை போட்டியிடுவாரா? என்கிற கேள்விகள் எழுந்தது. அந்த கேள்விகளுக்கு அவரே பதிலையும் அளித்திருக்கிறார். கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இது குறித்து பேசும்போது ” நான் அடுத்த மாநிலத் தலைவர் பதவிக்கான போட்டியில் இல்லை. எனவே, நான் மாநிலத் தலைவருக்கான தேர்தலில் மனுத் தாக்கல் செய்யமாட்டேன்” எனவும் திட்டவட்டமாக தெரிவித்தார்.