நான் அவளில்லை! அனைத்து கேள்விகளுக்கும் சுவாதி ஒரே பதில்!
கோகுல்ராஜ் கொலை வழக்கில் எழுதி கொடுத்து கூற சொன்னார்கள் என்று நீதிபதிகளிடம் சுவாதி வாக்குமூலம்.
கோகுல்ராஜ் கொலை வழக்கு உத்தரவுகளை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீடு வழக்குகளில் இன்று உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் ஆஜராகி பிறழ் சாட்சியாக மாறிய சுவாதி தனது வாக்குமூலத்தை அளித்து வருகிறார். அப்போது, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அனைத்து கேள்விகளுக்கு நான் அவள் இல்லை என சுவாதி ஒரே பதில் சொல்லி வருவதாக கூறப்படுகிறது.
கோகுல்ராஜ் கடத்தப்பட்டது தொடர்பாக சிலருடன் பேசிய ஆடியோ நீதிமன்றத்தில் ஒளிபரப்பப்பட்டது. ஆடியோவில் பேசியது யார் என்று சுவாதியிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். நான் யாரிடமும் இப்படி பேசவில்லை என்று நீதிபதிகளிடம் சுவாதி தெரிவித்தார். சுவாதி பேசியதாக ஒளிப்பரப்பப்பட்ட ஆடியோ, குரல் பரிசோதனைக்கு அனுப்பப்படும் என நீதிபதிகள் கூறினர்.
நான் பேசவில்லை என்று கூறிய சுவாதிக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர். இதுபோன்று, புகைப்படத்தை காண்பித்து இது யாரென கேட்டதற்கு நான் இல்லை என கூறியுள்ளார். உங்களது புகைப்படத்தையே உங்களுக்கு தெரியவில்லை என கூறுவதெல்லாம் ஏற்புடையதல்ல, வாழ்க்கையில் முக்கியம் சத்தியமும், நியாயமும், தர்மமும்தான், சாதி முக்கியமல்ல என நீதிபதிகள் கூறினர்.
புகைப்படத்தை காண்பித்து இது யாரென மீண்டும் சுவாதியிடம் கேட்டபோது இது நான் தான் என ஒப்புக்கொண்டார். இந்த புகைப்படத்தில் காண்பித்த நபரை நீங்கள் வீடியோவில் பார்க்கவில்லையா? என நீதிபதிகள் கேட்ட கேள்வி எழுப்பினர். 23-ஆம் தேதி நீங்கள் கோகுல்ராஜை பார்க்கவே இல்லை என தெரிவித்தீர்கள், ஆனால் மாஜிஸ்திரேட் முன்பு தெரியும் என தெரிவித்தீர்கள் என நீதிபதிகள் சுவாதியிடம் கூறியுள்ளனர். வாக்குமூலத்தில் ஏன் அப்படி தெரிவித்தீர்கள் எனவும் கேட்டனர்.
எழுதி கொடுத்து கூற சொன்னார்கள் என்று சுவாதி, நீதிபதிகளிடம் கூறினார். யாருக்கு பயந்து சாட்சி அளித்தேன், இது அனைத்துக்கும் காவல்துறைக்கும் பயந்துதான் சாட்சி அளித்தேன் என சுவாதி தெரிவித்தார். சுவாதி கூறியதை ஏற்க மறுத்த நீதிபதிகள், மாஜிஸ்திரேட்டிடம் உண்மையை சொல்லி இருக்கலாமே எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும், தனக்கு தெரிந்ததையே கூறியதாக நீதிமன்றத்தில் சுவாதி கண்ணீர் விட்டார். யுவராஜ் யாரென்றே எனக்கு தெரியாது, வழக்கு தொடங்கிய பிறகே அவரை தெரியும் எனவும் சுவாதி கூறிய நிலையில், கோகுல்ராஜ் கொலை வழக்கு தொடர்பாக சுவாதியிடம் தொடர்ந்து நீதிபதிகள் வாக்குமூலம் பெற்று வருகின்றனர்.