அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்ற ஆளுமை மிக்க தலைவர் நான் அல்ல – முதல்வர்
அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்ற ஆளுமை மிக்க தலைவர் நான் அல்ல என்று அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி பேச்சு.
அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று காலை சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் 16 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய முதல்வர், அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்ற ஆளுமை மிக்க தலைவர் நான் அல்ல. கட்சி கொடுத்த பணியை சிறப்பாக செய்து வருவதாக நம்புகிறேன்.
சட்டமன்ற தேர்தலில் ஒற்றுமையுடன் பணியாற்றினால்தான் அதிமுக வெற்றி பெற முடியும். நான் அதிமுகவின் விசுவாசமிக்க தொண்டன். எனது வார்த்தைகள் அனைத்தும் இதயத்தின் ஆழ்மனதில் இருந்து வருபவை. இனிவரும் காலங்களில் சிறப்பாக பணியாற்ற உறுதி ஏற்போம். உண்மைக்கு மாறான கருத்துக்களை கூறி அதிமுகவை வீழ்த்த முடியாது. ஏப்ரல், மே மாதத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்க வாய்ப்பு உள்ளது.
திட்டம் போட்டு தேர்தலை சந்தித்தால் வெற்றி உறுதி. 4 ஆண்டுகளில் சிறப்பான ஆட்சியை வழங்கியுள்ளேன் என நம்புகிறேன். வரும் தேர்தலில் ஒவ்வொரு வாக்கும் முக்கியம் என்பதால் சிந்தாமல், சிதறாமல் வாக்குகளை பெற வேண்டும். மெரினாவில் ஜெயலலிதா நினைவிடத்தை இன்னும் ஒரு மாதத்தில் திறக்க உள்ளோம். ஆளுநரிடம் திமுக தலைவர் ஸ்டாலின் கொடுத்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் என தெரிவித்துள்ளார்.