தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு யாரை நியமித்தாலும் மகிழ்ச்சி – கேஎஸ் அழகிரி
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக வேறு ஒருவரை நியமிதாலும் அதனை முழு மனதோடு ஏற்று கொள்வேன் என கேஎஸ் அழகிரி பேட்டி.
டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் தலைமையகத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழக அரசியல் சூழல் குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோருடன் ஆலோசனை மேற்கொள்வதற்கு டெல்லி வந்துள்ளேன்.
தலைவர் பதவி மாற்றம் தொடர்பான தகவல் அறிந்து டெல்லி வரவில்லை. பதவி கேட்டு காங்கிரஸ் தலைவர்களை சந்தித்தது கிடையாது. பதவி கிடைத்த பின்னர், பதவியை தக்க வைக்க தலைவர்களை சந்திப்பதும் கிடையாது. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக நீடித்தாலும் மகிழ்ச்சி, வேறு ஒருவரை நியமித்தாலும் மகிழ்ச்சி தான் என்றார்.
எனக்கு ஒரு பணி வழங்கப்பட்டால் அதை மகிழ்வுடன் செய்வேன். எனக்கு உரிய பணியை செய்வதில் மகிழ்ச்சி. தமிழகத்தில் 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 72% வெற்றி பெற்றுள்ளோம். 2024 மக்களவை தேர்தலில் திமுகவிடம் அதிக தொகுதிகளை கேட்க முடிவு செய்துள்ளோம். எனவே, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக வேறு ஒருவரை நியமிதாலும், அதனை முழு மனதோடு ஏற்று கொள்வேன் என தெரிவித்தார்.
இதனிடையே, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியின் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து புதிய தலைவர் நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகி வருகிறது. இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் கார்கே, ராகுல்காந்தி, வேணுகோபால் ஆகியோர் ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவிக்கு ஜோதிமணி எம்.பி., செல்லக்குமார் எம்.பி., கார்த்தி சிதம்பரம், முன்னாள் எம்.பி., பி.விசுவநாதன் ஆகியோர் தீவிரமாக முயற்சித்து வருகிறார்கள். இந்த சமயத்தில் டெல்லி சென்றுள்ள தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று இரவு கார்கேவை சந்தித்து பேசினார். இந்த நிலையில், தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு யாரை நியமித்தாலும் மகிழ்ச்சி என்று புதிய தலைவர் விவகாரம் தொடர்பாக தெரிவித்துள்ளார்.