“நானும் ரவுடிதான்…அண்ணாமலை மீது வழக்கு?” – அமைச்சர் நாசர் அதிரடி!
ஆவின் தொடர்பான கருத்துக்காக அண்ணாமலை மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.
ஆவின் குறித்து பொய்யான தகவல்களை பரப்பிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என பால்வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் எஸ்.எம்.நாசர் தெரிவித்துள்ளார்.
கோவை ஆவின் நிறுவனத்தின் ஆய்வுக்குப் பிறகு,நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நாசர்:”அண்ணாமலை,தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே நானும் ரவுடிதான் என்பதுபோல அரசு மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தொடர்ந்து கூறி வருகிறார்.ஆனால், கடந்த பட்ஜெட்டின்போதுதான் ஆவின் சுகாதார கலவை தயாரிக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. அவ்வாறு இருக்க சுகாதார கலவையை(ஹெல்த் மிக்ஸ்) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் 77 கோடி ரூபாய்க்கு வாங்கியதாக ஆதாரமற்ற மற்றும் பொய்யான தகவல்களை பரப்பியதற்காக அண்ணாமலை மீது கண்டிப்பாக வழக்கு தொடரப்படும்,” என்றார்.
மேலும்,கடந்த அதிமுக ஆட்சியில் ஆவின் நிறுவன காலிப்பணியிடங்களில் முறைகேடாக பணியமர்த்த முயற்சி செய்தனர். ஆனால்,திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அவை நிறுத்திவைக்கப்பட்டன. தற்போது,அதை முறைப்படுத்தி,தவறுகள் ஏதும் நடைபெறாத வகையில் காலிப்பணியிடங்கள் வெளிப்படைத்தன்மையுடன் நிரப்பப்படும் என்றார்.