“இதுதான் திராவிடன் ஸ்டாக்.! அது வேற ‘வன்மம்’ ஸ்டாக்!” மு.க.ஸ்டாலின் பேச்சு
நான் திராவிடன் ஸ்டாக். இதற்கு மாறாக ஒரு ஸ்டாக் உள்ளது. அது வன்மம் பிடித்த ஸ்டாக் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.
தூத்துக்குடி : 2 நாள் பயணமாக தூத்துக்குடி வந்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று, அரசு உதவி பெரும் பள்ளிகளில் தமிழ்வழி கல்வி பயின்று உயர்கல்வி படிப்பு பயிலும் மாணவிகளுக்கு புதுமை பெண் விரிவாக்க திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தை துவங்கி வைத்தார். ஏற்கனவே இந்த திட்டம் அரசு பள்ளி மாணவிகள் மத்தியில் செயல்படுத்தப்பட்டு வந்தது.
இந்த நிகழ்வில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,”இத்தனை மாணவர்களை ஒரே இடத்தில் பார்ப்பதில் திராவிடன் ஸ்டாக்காக பெருமை கொள்கிறேன். இதற்கு மாறக ஒரு ஸ்டாக் உள்ளது. அது சாதி, மத உணர்வுகளை மக்களிடையே தூண்டும் வன்மம் பிடித்த ஸ்டாக். பெண்கள் எல்லாம் வீட்டில் தான் இருக்க வேண்டும் என நினைக்கும் காலாவதியான ஸ்டாக். ” என விமர்சனம் செய்தார்.
மேலும் பேசிய முதல்வர், ” கல்வியில் அதிக மதிப்பெண்கள் பெறுவதில் தமிழ்நாட்டு பெண்கள் எப்போதும் டாப் . உயர்கல்வி படிப்பதிலும் டாப், படித்து முடித்து வேலைக்கு போவதிலும் டாப். பாரதி கண்ட கனவை புதுமைப்பெண் திட்டம் மூலம் திராவிட மாடல் அரசு நிறைவேற்றி வருகிறது. இத்திட்டத்தால் செலவு அதிகம் என பார்க்கவில்லை. தந்தைக்குரிய செயலாகவே பார்க்கிறேன். மாணவர்கள் கல்விக்கு எந்த தடை வந்தாலும் அதனை நான் உடைப்பேன்.
மாணவிகள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்துங்கள். உங்களுக்கு தேவையான உதவிகள் அனைத்தையும் செய்துதர நான் இருக்கிறேன். பிள்ளையின் கல்விச் செலவுக்கு தந்தைகள் கணக்கு பார்க்க மாட்டார்கள். அதுபோலதான் நானும். ” என புதுமை பெண் திட்ட விரிவாக்க நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.