எனக்கும் முதலமைச்சர் கனவு உண்டு! திருமாவளவன் பளீச் பேச்சு!
எனக்கும் முதலமைச்சர் கனவு உண்டு. அதற்கு முதல் புள்ளி தான் வைத்துள்ளோம். இன்னும் நூறு புள்ளிகள் வைக்க வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
திண்டுக்கல் : விசிக தலைவர் திருமாவளவன் இன்று தனது கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பல்வேறு கருத்துக்களை கூறினார். தமிழக அரசியலில் விசிக தாக்கம், மற்ற மாநிலங்களில் விசிக கட்சியின் வளர்ச்சி, அடுத்தகட்ட செயல்பாடுகள் என பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார்.
அவர் பேசுகையில், ” நாம் அரசியலில் அடியெடுத்து வைத்த போதே நாம் கூறியது, ‘ எளிய மக்களுக்கும் அதிகாரம் என்பது அளிக்கப்பட வேண்டும்’ என்பது தான் நாம் வைத்த முதல் முழக்கம். அந்த இலக்கை உடனடியாக எட்டிப்பிடித்து விட முடியாது.
சில நிருபர்கள் கேட்கிறார்கள், ‘நீங்கள் எப்போது முதல்வராக போகிறீர்க்ள்’ என்று, அவர்களிடம் நான், கேள்வியை மாற்றி கேளுங்கள். நீங்கள் எப்போது பிரதமராக போகிறீர்கள் என்று கேளுங்கள் என்று கூறினேன். நமது இலக்கு அடிமைகளாக இருந்தவர்கள் ஆட்சி செய்பவர்களாக வலுபெற செய்ய வேண்டும்.
எனக்கும் முதலமைச்சர் கனவு உண்டு என நான் 20 ஆண்டுகளுக்கு முன்பேசெய்தியாளர்களிடம் கூறினேன். அதற்கான அர்த்தம், நானே முதலமைச்சர் நாற்காலியில் அமர போகிறேன் என்று அர்த்தமல்ல. எளிய மக்கள் அந்த இடத்திற்கு செல்ல வேண்டும். இப்போது தான் அதற்கு முதல் புள்ளி வைத்துள்ளோம்.
இன்னும் நிறைய புள்ளிகள் வேண்டும். நூற்றுக்கணக்கான புள்ளிகள் வைத்தால் தான் கோலம் வரைய முடியும். கட்சி தொடங்காமலே பலர் முதலமைச்சராகி விட வேண்டும் என நினைக்கிறார்கள். ஆனால், நாம் அங்குலம் அங்குலமாக வளர்ந்து வருகிறோம். தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக வளர்ந்து வருகிறோம். மகாராஷ்டிராவில் சிறுத்தை கொடி பறக்கிறது. கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா என தென்னிந்தியாவில் விசிக பரவுகிறது.
விசிக, மக்கள் மத்தியில் நம்பிக்கை உருவாக்கி இருக்கிறது. தற்போது நமது கட்டமைப்பை வலுபடுத்த வேண்டும். ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் ஒரு பொறுப்பாளரை நியமித்துள்ளோம்.” என விசிக தலைவர் திருமாவளவன் திண்டுக்கல்லில் பேசியுள்ளார்.