ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி தரப்படாது – அமைச்சர் மெய்யநாதன்
ஓஎன்ஜிசி நிறுவனம் எண்ணெய் கிணறு அமைக்க அனுமதி வழங்கப்படாது என்பது உறுதி என்று அமைச்சர் தகவல்.
கடந்த 2013-ஆம் ஆண்டு திருவாரூர் மாவட்டம் பெரியகுடியில் ஓஎன்ஜிசி நிறுவனம் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்காக கிணறு தோண்டிய போது பெரிய விபத்து ஏற்பட்டது. இந்த விபத்திற்கு பிறகு விவசாயிகளின் போராட்டம் காரணமாக கிணறு முற்றிலுமாக மூடப்பட்டது. 2021-ஆம் ஆண்டு மீண்டும் கிணறை செயல்படுத்த ஓஎன்ஜிசி நிறுவனம் முனைப்பு காட்டியபோது தமிழக அரசு அனுமதி வழங்க மறுப்பு தெரிவித்தது.
பெருங்குடியில் ஓஎன்ஜிசி பணிகள் தொடங்குவது தொடர்பாக சம்மந்தப்பட்ட ஊரை சேர்ந்த விவசாயிகளுக்கும், அதிகாரிகளுக்கும் கடித்த அனுப்பப்பட்டது. விவசாயிகள் கடும் எதிர்ப்பை அடுத்து, சமாதான கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில், ஓஎன்ஜிசி மீண்டும் எண்ணெய் கிணறுகள் அமைக்க முயற்சி செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக தமிழக சுற்றுசூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கூறுகையில், டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக கடந்த 2020-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.
டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட பிறகு எண்ணெய் கிணறுகள் தோண்டுவதற்கோ, புதுப்பிக்கவும் அனுமதி இல்லை. மண்ணை பாழாக்கும் எந்த திட்டத்திற்கும் அனுமதி இல்லை என்பதில் முதலமைச்சர் உறுதியாக உள்ளார். ஓஎன்ஜிசி நிறுவனம் எண்ணெய் கிணறு அமைக்க அனுமதி வழங்கப்படாது என்பது உறுதி. கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படாமல் எண்ணெய் கிணறு அமைக்க தமிழக அரசு அனுமதி வழங்காது. ஓஎன்ஜிசி நிறுவனம் எந்த ரூபத்தில் நடவடிக்கை எடுத்தாலும், எண்ணெய் கிணறு திட்டத்தை தொடங்க முடியாது என்றும் அமைச்சர் திட்டவட்டமாக தெரிவித்தார்.