“பாட்டாளிகளை வேட்டையாடுவதா?…மாபெரும் போராட்டம் நடத்துவோம்” – ராமதாஸ் ஆவேசம்!

Default Image

கஞ்சா,மது விற்பனையை தடுக்க முடியாத கடலூர் காவல்துறை, கருத்துரிமையை மதியாது பாட்டாளிகளை வேட்டையாடுவதா? என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டத்தில் பா.ம.க. சமூக ஊடகப் பேரவை பொறுப்பாளர் ராஜேஷ் கைது செய்யப்பட்டதில் நடந்த அத்துமீறல்கள் குறித்தும், தொடர்ந்து பா.ம.க.வினருக்கு எதிராகப் பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருவது குறித்தும் விசாரணை நடத்த தமிழக முதலமைச்சர் ஆணையிட வேண்டும் என்றும்,தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால்,கடலூர் மாவட்டத்தில் மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை பா.ம.க. நடத்தும் என்று அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக,தனது முகநூல் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:

சமூகவிரோதிகளை ஒடுக்கி வைத்து,சமூகத்தைக் காப்பாற்ற வேண்டியது தான் காவல்துறையின் முதன்மை கடமை ஆகும்.ஆனால், கடலூர் மாவட்ட காவல்துறை சமூகவிரோதிகளுக்கு துணையாக நின்று,அப்பாவி பாட்டாளிகளை வேட்டையாடிக் கொண்டிருக்கிறது.அனைவருக்கும் பணி செய்ய வேண்டிய கடமையை மறந்து ரன்வீர் சேனை தலைவரைப் போல கடலூர் காவல் கண்காணிப்பாளர் செயல்படுவது கண்டிக்கத்தக்கது.

கடலூர் மாவட்டம் பால்வாத்துண்ணான் கிராமத்தைச் சேர்ந்தவர் இராஜேஷ். பாட்டாளி சமூக ஊடகப் பேரவையின் பொறுப்பாளராக பணியாற்றி வருகிறார்.வாழ்வாதாரத்திற்காக திருப்பூரில் பணி செய்து வருகிறார். முந்தைய அதிமுக ஆட்சியின் போது இராஜேஷ் முகநூலில் அரசியல் நிகழ்வு குறித்து ஒரு பதிவிட்டுள்ளார்.அந்தப் பதிவில் யாருடைய பெயரையும் அவர் குறிப்பிடவில்லை,அதில் அவதூறும் இல்லை.இது தொடர்பாக அவர் மீது சிலர் அளித்த புகார் குறித்து முந்தைய ஆட்சியில் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.அதில் இராஜேஷின் பதிவில் ஆட்சேபகரமாக எதுவும் இல்லை என்று கூறி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இப்போது அதே பதிவுக்காக கடலூர் மாவட்டம் புதுச்சத்திரம் காவல்துறையினர் 400 கி.மீ பயணம் செய்து திருப்பூரிலிருந்து இராஜேஷை சட்டவிரோதமாக கைது செய்து வந்து கடலூரில் சிறையில் அடைத்துள்ளனர்.

இராஜேஷ் கைது விவகாரத்தில் காவல்துறையினர் சட்டத்தை துளியும் மதிக்கவில்லை.கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரின் பழிவாங்கும் உணர்வுக்கு தீனி போடும் வகையில் சட்டவிரோத சக்திகள் செயல்படுவதைப் போலவே புதுச்சத்திரம் காவல்துறையினர் செயல்பட்டுள்ளனர்.இராஜேஷ் மீது அளிக்கப்பட்ட புகாரின் உண்மைத் தன்மை,அதனடிப்படையில் கடலூர் மாவட்ட காவல்துறையினர் நடந்து கொண்ட விதம் ஆகியவற்றை ஆய்வு செய்தால் கடலூர் மாவட்ட காவல்துறையினரின் அத்துமீறலை புரிந்து கொள்ள முடியும்.

முகநூலில் இராஜேஷ் இட்ட பதிவில் அவதூறாக எதுவும் இல்லை. இது தொடர்பாக ஏற்கனவே அளிக்கப்பட்ட புகார் நிராகரிக்கப்பட்டுள்ளது. இப்போது புதிதாக அளிக்கப்பட்ட புகாரில் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை படித்துப் பார்த்தால் அதை குழந்தைகள் கூட நம்பாது. அத்தகைய புகாரின் அடிப்படையில் புதுச்சத்திரம் காவல்நிலைய காவலர்கள் திருப்பூர் வரை சென்று ஒருவரை கைது செய்ய வேண்டிய தேவை என்ன? இராஜேஷ் மீது பொய்யாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் அவருக்கு அதிகபட்சமாக ஓரிரு மாதங்கள் மட்டுமே சிறை தண்டனை வழங்க முடியும். 7 ஆண்டுகளுக்கும் குறைவாக தண்டனை வழங்கக்கூடிய வழக்குகளில் எவரையும் கைது செய்யக்கூடாது என்று சில நாட்களுக்கு முன்பு தான் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. அதையும் மீறி யாரை திருப்தி படுத்துவதற்காக இந்த அத்துமீறலை கடலூர் காவல்துறை செய்திருக்கிறது?

இராஜேஷ் கைது செய்யப்பட்ட விவகாரத்தில்,டி.கே.பாசு வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய அனைத்து வழிகாட்டுதல்களும் மீறப்பட்டிருக்கின்றன.ஒருவரை கைது செய்வதற்கு முன் அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருக்க வேண்டும்.காவல்துறையினர் சீருடையில் சென்று தான் கைது செய்ய வேண்டும்.கைது குறித்து சம்பந்தப்பட்டவரின் குடும்பத்தினருக்கு தெரிவிக்க வேண்டும்.ஆனால், இதில் எந்த நடைமுறையையும் கடலூர் மாவட்ட காவல்துறை பின்பற்றவில்லை.

புதுச்சத்திரத்தில் இருந்து TN 10 AW 0961 என்ற எண் கொண்ட வெள்ளை நிற ஸ்விப்ட் டிசையர் மகிழுந்தில், சாதாரண உடையில் திருப்பூர் சென்ற காவலர்கள்,இராஜேசின் வீட்டுக்கு சென்று ஏதோ முகவரி கேட்டுள்ளனர். அதற்கான அவரை வெளியில் அழைத்து வந்த காவலர்கள்,மகிழுந்தில் கட்டாயப்படுத்தி ஏற்றியுள்ளனர்.அதன்பிறகு தான் அவரை கைது செய்வதாக கூறியுள்ளனர்.பிடி ஆணை,முதல் தகவல் அறிக்கை உள்ளதா? என்று கேட்டதற்கு எதுவுமே இல்லை என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.வீட்டில் கருவுற்ற மனைவி தனியாக இருக்கிறார், அவருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கூறிய போதிலும் கூட,அதை அனுமதிக்காமல் அவரது செல்பேசியை காவலர்கள் பிடுங்கி வைத்துக் கொண்டனர்.சட்டப்படி செயல்படும் காவல்துறை இத்தகைய செயல்களில் ஈடுபடாது; சட்டவிரோத கடத்தல் கும்பல்கள் தான் இத்தகைய செயல்களை செய்யும்.

இராஜேஷ் தனியார் வாகனத்தில் சிலரால் அழைத்துச் செல்லப்பட்ட தகவல் பரவியதும்,அவர் கடத்தப்பட்டு இருக்கலாம் என்ற அச்சத்தில் அவரை பாட்டாளி மக்கள் கட்சியினர் தேடத்தொடங்கினார்கள்.வாழப்பாடி அருகில் அந்த மகிழுந்தை அடையாளம் கண்டு தடுத்து நிறுத்தி விசாரித்த போது தான்,இராஜேஷை அழைத்துச் சென்றவர்கள் புதுச்சத்திரம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் வினோத் குமார் தலைமையிலான காவலர்கள் என்று தெரியவந்தது. அவர்களிடம் பிடி ஆணை உள்ளதா? என்று கேட்டபோது எதுவுமே இல்லை என்று கூறியுள்ளனர்.அதன்பின்னர் அவரை புதுச்சத்திரத்திற்கு அழைத்து வந்து காவலில் அடைத்திருக்கின்றனர்.

ஒரு சாதாரண முகநூல் பதிவுக்காக பாட்டாளி மக்கள் கட்சித் தொண்டர் ஒருவரை கைது செய்வதற்காக இவ்வளவு தூரம் பாடுபடும் கடலூர் மாவட்ட காவல்துறை மாவட்டம் முழுவதும் தங்கு தடையின்றி நடைபெறும் கஞ்சா மற்றும் கள்ளச்சாராய விற்பனையை தடுத்து நிறுத்த எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.பாட்டாளி மக்கள் கட்சியினர் மீது ஒன்றுமில்லாத விஷயங்களுக்கு எல்லாம் கடலூர் மாவட்ட காவல்துறை வழக்குப் பதிவு செய்வது இது முதல் முறையல்ல,ஏழாவது முறை. இந்த வழக்குகள் அனைத்துமே முகநூல் பதிவுகளுக்கானது தான்.இந்த பொய்வழக்குகளில் சிக்கவைக்கப்பட்ட பா.ம.க.வினரை கைது செய்ய கடலூர் காவல்துறை அதன் அனைத்து பலங்களையும் சட்டவிரோதமாக பயன்படுத்தியுள்ளது. அவற்றிலும் சில முயற்சிகளை பாட்டாளி மக்கள் கட்சியினர் சட்டரீதியாக எதிர்கொண்டு முறியடித்துள்ளனர்.

பாட்டாளி மக்கள் கட்சியினருக்கு எதிரான இந்த நடவடிக்கைகள் அனைத்திற்கும் காரணம் கடமையை சரி வர செய்யாமல்,சட்டவிரோத சக்திகளுக்கு துணையாக செயல்பட்டு வரும் காவல்துறை கண்காணிப்பாளர் தான்.அவரது கடமை தவறல்களையும், ஒருசார்பு செயல்பாடுகளையும் பாட்டாளி மக்கள் கட்சி அம்பலப் படுத்தியதால் தான் அவர் இவ்வாறு பழிவாங்கும் நோக்கத்தில் நடந்து கொள்கிறார். பண்ருட்டி முந்திரி ஆலை தொழிலாளர் கோவிந்தராசு கொலை வழக்கை, தற்கொலையாக ஜோடித்து அதில் சம்பந்தப்பட்டவர்களை காப்பாற்ற அவர் முயன்றார். உயர்நீதிமன்றம் வரை சட்டப்போராட்டம் நடத்தி அதை பா.ம.க. முறியடித்தது.

கடலூரில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற மாவட்ட ஊராட்சிக் கூட்டத்தில், கடலூர் நகரில் கஞ்சா,கள்ளச் சாராயம் போன்றவை சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதாகவும்,அது தொடர்பாக காவல்துறையிடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் பா.ம.க. உறுப்பினர் முத்துகிருஷ்ணன் குற்றஞ்சாட்டியுள்ளார்.இதுகுறித்த செய்திகள் வெளியானதும் அவரை காவல் கண்காணிப்பாளர் தொடர்பு கொண்டு மிரட்டியுள்ளார்.அதன் தொடர்ச்சியாகவே பாட்டாளி மக்கள் கட்சியினரை பழிவாங்கும் நோக்குடன் இராஜேஷை கைது செய்யும் படலம் அரங்கேறியுள்ளது.இது மிகக்கடுமையாக கண்டிக்கத்தக்கது ஆகும்.

இராஜேஷ் கைது செய்யப்படும் போது அவருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை கூட பதிவாகவில்லை.அவரை கைது செய்த பிறகு தான் முதல் நாளே முதல் தகவல் அறிக்கை தயார் செய்தது போன்று ஜோடனை செய்துள்ளனர். இராஜேஷின் பிணை மனு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது கூட, அவருக்கு பிணையை தாமதப்படுத்த வேண்டும் என்பதற்காக, நீதிமன்ற அறிவிக்கையை உடனடியாக பெற வேண்டாம் என்று வழக்கறிஞர்களுக்கு காவல் கண்காணிப்பாளர் ஆணையிட்டுள்ளார்.சுருக்கமாக கூற வேண்டுமானால்,கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரின் செயல்பாடுகள் காவல்துறை விதிகளுக்கும்,சட்டங்களுக்கும் உட்பட்டு இல்லை.பிகார் மாநிலத்தில் உழைக்கும் பாட்டாளிகளை ஒடுக்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட ரன்வீர் சேனையின் தலைவரைப் போலத் தான் உள்ளன.

சட்டம் – ஒழுங்கை சிறப்பாக செயல்படுத்தி ஓர் ஆட்சிக்கு நல்ல பெயரை வாங்கித் தருவதும் காவல்துறை தான்,மனித உரிமைகளை மதிக்காமல் செயல்பட்டு அரசுக்கு அவப்பெயரை தேடித் தருவதும் காவல்துறை தான். தமிழ்நாட்டில் காவல்துறைக்கு நல்ல முதலமைச்சர் இருக்கிறார்; காவல்துறைக்கு நல்ல தலைமை இயக்குனர் இருக்கிறார்.ஆனால்,ஒரு சில தவறான அதிகாரிகளின் செயல்பாடுகளால் அரசுக்கு அவப்பெயர் ஏற்பட்டு விடக் கூடாது.இது போன்ற அத்துமீறல்களை முதலமைச்சர் முளையிலேயே கிள்ளி எறியவேண்டும்.

கடலூர் மாவட்டத்தில் பா.ம.க. சமூக ஊடகப் பேரவை பொறுப்பாளர் ராஜேஷ் கைது செய்யப்பட்டதில் நடந்த அத்துமீறல்கள் குறித்தும், தொடர்ந்து பா.ம.க.வினருக்கு எதிராகப் பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருவது குறித்தும் விசாரணை நடத்த தமிழக முதலமைச்சர் ஆணையிட வேண்டும்.தவறு செய்த காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.பாட்டாளிகள் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்படுவதை பொறுத்துக் கொண்டிருக்க முடியாது.தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால்,கடலூர் மாவட்டத்தில் மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை பா.ம.க. நடத்தும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்”,என்று கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Lottery Martin - Kanguva
childrens day (1)
rinku singh
Vaiko - Apollo Hospital
doctor balaji
Rajeev gandhi co-operative hospital
kanguva review