மருத்துவர்களின் அலட்சியத்தால் தாயும் சேயும் பரிதாப மரணம்.. விளக்கமளிக்க மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்..

- மருத்துவர்கள் இல்லாமல் செவிலியர்கள் பிரசவம் பார்த்ததால் தாயும் சேயும் மரணம்.
- இதுகுறித்து விளக்கமளிக்க மணித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்.
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ் மடை பகுதி உள்ளாட்சி தேர்தலின் போது வாக்களித்து விட்டு வந்த போது நிறை மாத கர்ப்பிணி கீர்த்திகாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதனை அடுத்து கடந்த டிசம்பர் மாதம் அவர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அந்த மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாத நிலையில் செவிலியர்கள் மட்டுமே இருந்துள்ளனர். இந்நிலையில் அவர்களாளே பிரசவமும் பார்க்கப்பட்டது. இதில் குழந்தை இறந்து பிறந்தது. இதன் பின்னர் கீர்த்திகாவும் உயிரிழந்தார். இதனையடுத்து மருத்துவர் தாமதமாக வந்ததால், தாயையும், சேயையும் காப்பற்ற முடியவில்லை என அந்தப்பெண்ணின் உறவினர்கள் போராட்டம் நடத்தினர் .
இது தொடர்பான செய்தி ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது, இது தொடர்பான பத்திரிக்கை செய்திகளை அடிப்படையாகக் கொண்டு மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன் வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கை விசாரித்த மாநில மனித உரிமைகள் ஆணையம், மருத்துவர்கள் தாமதமாக வந்ததால் நிறைமாத கர்ப்பிணியும், வயிற்றில் இருந்த சேயும் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட மருத்துவ சேவைகள் துறை இயக்குனர் 4 வார காலத்திற்க்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த விவகாரம் கடமையை சரியாக செய்யாத ஒவ்வொரு அதிகாரிகளுக்கும் ஒரு பாடமாக அமைய வேண்டும் என பொதுமக்கள் கருதுகின்றனர்.