வன்கொடுமை விவகாரம் : மாணவி புகார் பெறப்பட்டது எப்படி? அமைச்சர் கோவி.செழியன் விளக்கம்!
அண்ணா பல்கலைக்கழக மாணவியின் புகார் பெறப்பட்டது குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறை உடனடியாக ஞானசேகரன் என்பவரை அதிரடியாக கைது செய்தது. அவரிடம் தற்போது தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் செய்தியாளர்களை சந்தித்தபோது முதலில் காவல்துறையிடம் புகார் அளித்த பிறகே, பல்கலைக்கழகத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது என்று கூறியிருந்தார். ஆனால், அதற்கு முன்பு ஊடகங்களைச் சந்தித்த சென்னை காவல்துறை ஆணையர் அருண் ” பல்கலைக்கழகத்தின் குழு மூலமாகவே காவல்துறைக்குப் புகார் வந்தது என்று” கூறியிருந்தார். எனவே, அரசியல் தலைவர்கள் பலரும் ஏன் இந்த முரண் பாடு என கேள்விகளை எழுப்ப தொடங்கினார்கள்.
குறிப்பாக, தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ” ஏன் இத்தனை முரண்பாடுகள்? உண்மையில் யாரைக் காப்பாற்ற திமுக அரசு முயற்சிக்கிறது? உண்மையில் என்ன நடந்தது? எனவும் அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கு விசாரணை செல்லும் விதம், பல சந்தேகங்களை எழுப்புகிறது எனவும் கூறியிருந்தார்.
இந்த சூழலில், அண்ணா பல்கலைக்கழக மாணவியின் புகார் பெறப்பட்டது குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் அவர் கூறியதாவது ” அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த குற்றம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி காவல்துறை அவசர உதவி எண் 100 க்கு நேரடியாக தொடர்பு கொண்டு புகார் அளித்தார்.
அதன் அடிப்படையில் விசாரணை நடத்த காவல்துறையினரிடம் அண்ணா வந்த பல்கலைக்கழகத்தின் (POSH Prevention of Sexual Harrasment Committee) உள் விசாரணை குழுவினைச் சேர்ந்த ஒரு பேராசிரியரின் உதவியோடு பாதிக்கப்பட்ட பெண் நடந்த விவரங்களை சொல்லி புகார் அளித்திருந்தார்.
காவல்துறையினர் பல்கலைக்கழகத்திற்கு வந்து விசாரணை செய்யும் போதுதான் இந்த சம்பவம் தொடர்பாக POSH குழுவில் இருந்த மற்றவர்களுக்கு இந்த பிரச்சனை தெரியவந்துள்ளது. அதை வைத்துதான் POSH குழு நேரடியாக புகார் அளிக்கவில்லை என தெரிவித்திருந்தேன். அது தவறான பொருள்படும்படி அமைந்துவிட்டது” என அமைச்சர் கோவி.செழியன் கூறியுள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக மாணவியின் புகார் பெறப்பட்டது குறித்து மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் திரு.கோவி.செழியன் அவர்கள் விளக்கம்.#CMMKSTALIN | #DyCMUdhay | #TNDIPR |@CMOTamilnadu @mkstalin@mp_saminathan @GChezhiaan pic.twitter.com/EcsF9hXq3t
— TN DIPR (@TNDIPRNEWS) December 27, 2024