எஃப்.ஐ.ஆர் வெளியானது எப்படி? வருண்குமார் பெரிய அப்பாடக்கரா? – சீமான் பரபரப்பு பேட்டி!
நாங்கள் எதற்காக போராட்டம் நடத்தினோம் என்பது கூட தெரிய விடாமல் தடுத்த காவல்துறையினரின் நடவடிக்கை கொடுமையானது என்று சீமான் குறியுள்ளார்.
சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து சென்னையில் போராட்டம் நடத்த முயன்ற நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கைது செய்யப்பட்டார். அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட முயன்ற சீமானும், நாம் தமிழர் கட்சியினரும் இன்று காலை கைது செய்யப்பட்டு சென்னை பெரியமேட்டில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது விடுவிக்கப்பட்டார்.
விடுதலைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், “தேவையற்ற ஒடுக்கு முறையாக எனது கைது நடவடிக்கையை பார்க்கிறேன். இதே இடத்தில் பல்வேறு போராட்டத்தை
நடத்தி இருக்கிறோம், ஆனால் இன்று மட்டும் கைது செய்யப்பட்டுள்ளேன்.
போராட்டங்களுக்கு அனுமதியில்லை என்றால் எங்களிடம் காவல்துறையினர் முறையாக தெரிவிப்பார்கள். நாங்கள் எதற்காக போராட்டம் நடத்தினோம் என்பது கூட தெரிய விடாமல் தடுத்த காவல்துறையினரின் நடவடிக்கை கொடுமையானது.
இத்தனை ஆயிரம் FIR பதிவாகும் போது, இது மட்டும் கசிந்தது எப்படி? நீங்கள் நடத்தினால் போராட்டம், நாங்கள் நடத்தினால் நாடகமா? யார் அந்த சார்? குற்றம் நடக்கும் இடங்களில் மட்டும் சிசிடிவி கேமராக்கள் இயங்காமல் போவது எப்படி? எதிர்க்கட்சியாக இருந்தபோது குரல் கொடுத்த தி.மு.க.வுக்கு இப்போது என்ன ஆனது. போராடவும் பேசவும் அனுமதி மறுப்பது ஏன்? என சீமான் அடுக்கடுக்காய் சரமாரி கேள்வி எழுப்பினார்.
இதை தொடர்ந்து, வருண்குமார் ஐபிஎஸ் குறித்த கேள்விக்கு பதிலளித்த சீமான், “வருண்குமார் காமெடி செய்து நான் மன்னிப்பு கேட்பதற்கு யார் அவர்? நான் போய் மன்னிப்பு கேட்கும் அளவுக்கு அவர் அவ்வளவு பெரிய அப்பாடக்கரா? மன்னிப்பு கேட்பதாக கெஞ்சியது அவர். என்னுடன் மோதி பெரிய ஆளாக காட்டிக்கொள்ள நினைக்க வேண்டாம். முடிந்தால் நான் மன்னிப்பு கேட்பதாக சொன்ன தொழிலதிபரை கூட்டி வாருங்கள்” என்று கூறினார்.
முன்னதாக, திருச்சி சரக D.I.G. வருண்குமார், “சீமான் என்னை தனியாக சந்தித்து மன்னிப்பு கேட்பதாக ஒரு தொழிலதிபர் மூலம் பேசினார். ஆனால், அதனை நான் ஒத்துக்கொள்ளவில்லை. பொதுவெளியில் மன்னிப்பு கேட்க தயாராக இருந்தால் நீதிமன்றத்தில் அதை தெரிவிக்கட்டும். சீமானின் பேச்சுக்கு நிச்சயம் தண்டனை வாங்கி தருவேன்” என்று பரபரப்பாக பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.