தேர்வு எழுதாமல் தேர்ச்சி பெற வேண்டும் என மாணவர்கள் எப்படி எதிர்பார்க்கலாம்?- சென்னை உயர்நீதிமன்றம்!
அரியர் தேர்வு விவகாரத்தில் ஏ.ஐ.சி.டி.இ. விதிகளுக்கு முரணான நிலைப்பாட்டை எடுக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், அனைத்து பட்டப் படிப்புக்களுக்கு இறுதிப் பருவத்தேர்வு தவிர, மற்ற பருவ தேர்வுகள் ரத்து செய்வதாகவும், அரியர் தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்திய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என தமிழக அரசு அறிவித்திருந்தது.
அரியர் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவித்த தமிழக அரசின் உத்தரவிற்கு அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இதனை எதிர்த்து அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி உள்பட 2 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர்.
அரசின் உத்தரவிற்கு சாதகமாக வாதாதிட தங்களை இணைத்து கொள்ளவேண்டும் என மாணவர்கள் சிலர் தரப்பில் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு, நீதிபதிகள் சத்யநாராயணன் மற்றும் ஹேமலதா ஹேமலதா அடங்கிய அமர்வில் மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது.
அரியர் தேர்வு விவகாரத்தில் ஏ.ஐ.சி.டி.இ. விதிகளுக்கு முரணான நிலைப்பாட்டை எடுக்க முடியாது என நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர். மேலும், தேர்வு எழுதாமல் தேர்ச்சி பெற வேண்டும் என
மாணவர்கள் எப்படி எதிர்பார்க்கலாம்? என ஏ.ஐ.சி.டி.இ.க்கு நீதிபதிகள் கேள்வியெழுப்பினார்கள்.
இதற்கு தமிழக அரசும், பல்கலைக்கழக மானியக் குழுவும் பதிலளிக்க நவம்பர் 20 வரை கால அவகாசம் விடுக்கப்படுவதாகவும், இந்த வழக்கின் விசாரணையை நவம்பர் 20 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.