தமிழ்நாட்டு மாணவர்களுக்கு எத்தனை இன்னல்கள் – சு.வெங்கடேசன் எம்.பி

Default Image

ஒன்றிய அரசுத் துறைகளின் பணி நியமனங்களில் எல்லாம் ஏதோ ஒரு வகையில் தமிழ் தேர்வர்கள் இன்னல்களுக்கு ஆளாவது நடந்தேறுகிறது என சு.வெங்கடேசன் எம்.பி கடிதம். 

அஞ்சல் தேர்வில் தமிழ்நாட்டு மாணவர்கள் விண்ணப்பிக்க முடியாதபடி தேர்வு படிவம். மும்மொழி திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.  தேர்வு படிவத்தை உடனே மாற்ற அஞ்சல் துறை செயலாளருக்கு சு.வெங்கடேசன் எம்.பி கடிதம்  எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், ஒன்றிய அரசுத் துறைகளின் பணி நியமனங்களில் எல்லாம் ஏதோ ஒரு வகையில் தமிழ் தேர்வர்கள் இன்னல்களுக்கு ஆளாவது நடந்தேறுகிறது. ஒரு வார காலமாக அஞ்சல் துறை நியமனங்களில் இந்த அலைக்கழிப்பு இருந்து வருகிறது.

ஜனவரி 27 முதல் ஆன் லைன் விண்ணப்பங்கள் அனுப்பலாம் என்றாலும் கிராமின் டாக் சேவக் (GDS) காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியாமல் தமிழ்நாடு மாநில தேர்வு முறைமையில் 10 ஆம் வகுப்பு தேறிய தேர்வர்கள் தவித்து வருகிறார்கள். இந்தியா முழுவதும் 40000 கிராமின் டாக் சேவக் (GDS) காலியிடங்களுக்கு பணி நியமனங்களை அஞ்சல் துறை மேற்கொள்ளவுள்ளது.

அவற்றில் தமிழ்நாட்டில் உள்ள காலியிடங்கள் 3167
10 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே இந்த நியமனங்கள் மேற்கொள்ளப்படும். ஆகவே ஆன்லைன் விண்ணப்பத்தில் 10 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் பாட வாரியாக கேட்கப்பட்டு உள்ளது. மாநில பாட முறையில் தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் ஆகிய 5 பாடங்களே உண்டு.

ஆனால் ஆன்லைன் விண்ணப்பத்தில் 6 வது பாடமும் இடம் பெற்றுள்ளது. அது “தெரிவு மொழி” என்பது. மற்ற மாநிலங்களில் இது இருக்கிறது. ஆகையால் பிற மாநில தேர்வர்களுக்கு பிரச்சினை இல்லை. 6 வது பாடமே இல்லாத, இரு மொழித் திட்டம் நடைமுறையில் உள்ள தமிழ்நாடு தேர்வர்கள் என்ன செய்வார்கள். 6 வது பாட விவரங்களை நிரப்பாவிட்டால் விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய ஆன்லைன் முறைமை விடவில்லை.

இந்தியா முழுமையும் தேர்வுகளை நடத்தும் போது மாநிலங்களில் உள்ள பிரத்தியேக சூழல்கள் கணக்கில் கொள்ளப்படாதது, அதிலும் குறிப்பாக மொழி குறித்த அணுகுமுறையில் காட்டப்படும் அலட்சியம் வருத்தத்திற்கும், கண்டனத்திற்கும் உரியது.

எத்தனை துறைகளில், எத்தனை நியமனங்களில் தமிழ்நாடு தேர்வர்கள் இத்தகைய பிரச்சினைகளை தொடர்ந்து எதிர்கொள்கிறார்கள் என்பது வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது. ஜனவரி 27 விண்ணப்ப தேதி ஆரம்பித்து ஒன்பது நாட்கள் ஓடி விட்டன. இன்னும் கடைசி தேதியான பிப்ரவரி 16 க்கு 10 நாட்களே உள்ளன. இன்னும் தீர்வு இல்லை.

ஆகவே நான் நேற்று அஞ்சல் துறை செயலாளர் திரு வினீத் பாண்டே, தமிழ்நாடு தலைமைப் பொது மேலாளர் பி.செல்வக்குமார் ஆகியோருக்கு கடிதங்களை எழுதியுள்ளேன். உடனடியாக ஆன்லைன் விண்ணப்பத்தில் 6 வது பாட விவரம் கட்டாயமாக கேட்கப்படுவது மாற்றப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்