விடுதலை புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் இறந்தது எப்படி.? இலங்கை ராணுவம் கூறிய தகவல் என்ன.?
இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்டதாக கூறப்படும் விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் எப்படி இருந்தார் என்று இலங்கை ராணுவம் 2009இல் வெளியிட்ட செய்தி குறிப்பில் உள்ள முக்கிய தகவல்களை இங்கே காணலாம்.
நேற்று மூத்த அரசியல்வாதியும் உலகத் தமிழர் பேரவையின் தலைவருமான பழ நெடுமாறன் தஞ்சையில் முள்ளிவாய்க்கால் நினைவு இடத்திற்கு சென்று பிறகு அங்கு செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு அதிர்ச்சி தகவல்களை தெரிவித்தார். அது தற்போது வரை பேசு பொருளாக இருந்து வருகிறது. அதாவது விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் அவர்கள் இன்னும் உயிருடன் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
பிரபாகரன் இருக்கிறார் : அவர் கூறியது என்னவென்றால், உலகம் முழுக்க உள்ள தமிழர்களுக்காக இந்த செய்தியை குறிப்பிடுகிறேன். அவர் இலங்கை தமிழர்களின் விடியலுக்கான திட்டத்தை வைத்துள்ளார். நான் பிரபாகரன் குடும்பத்தினருடன் நேரடி தொடர்பில் இருக்கிறேன் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், இந்த செய்தியை அவர்களின் அனுமதியோடுதான் பகிர்ந்து கொள்கிறேன் என்பதையும் குறிப்பிட்டு பேசி இருந்தார். இந்த செய்தி தமிழக அரசியல் மட்டுமல்லாமல், இலங்கை வரை இது பிரதிபலித்தது. மேலும், இலங்கை ராணுவம் கூறுகையில், பிரபாகரன் உயிருடன் இருக்க வாய்ப்பு இல்லை என்பதையும் தெரிவித்துள்ளது.
இப்படி இருக்கும் சூழலில், விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் எப்படி உயிரிழந்தார் என்பதை அந்நாட்டு ராணுவமே 2009 ஆம் ஆண்டு மே மாதம் தெரிவித்த கருத்துகளை தற்போது ஒரு சிறிய குறிப்பாக பார்க்கலாம்…
பிரபாகரனின் மூத்த மகன் : பிரபாகரனின் மூத்த மகன் சார்லஸ் அந்தோணி விடுதலைப் புலிகளின் வான் படையை முன் நின்று கையாண்டவர். அவரை இலங்கை ராணுவம் விமான தாக்குதல் மூலம் கொன்றதாக தகவல் வெளியாகியது . அதாவது பிரபாகரன் இறப்புக்கு ஒருநாள் முன்னதாக சார்லஸ் கொல்லப்பட்டார் என்ற தகவல் வெளியாகிறது.
மகனின் இறப்பு செய்தி : சார்லஸ் அந்தோணி இறந்துவிட்டார் என்றும், அவரது உடல் வனப்பகுதியில் இருப்பதுவும் தகவல் கிடைக்கவே, முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்த விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் தனது குழுவினருடன் சார்லஸ் அந்தோணியை தேடி புறப்பட்டு உள்ளார்.
ராணுவம் சுற்றிவளைப்பு : இதற்கு முன்னதாகவே பிரபாகரன் இங்கு தான் இருக்கிறார் என்பதை அறிந்த இலங்கை ராணுவம், அவர் வரும் வழியை அறிந்து அதற்கு முன்னதாகவே ராணுவத்தினர் தங்கள் படைகளுடன் சுற்றி வளைத்து விட்டனர்.
துப்பாக்கி சூடு : ஒரு ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் வேகமாக வெளியே வந்த போது, ராணுவ வீரர்கள் அந்த வானத்தை தடுத்து நிறுத்தி சுற்றி வளைத்து சரமாரியாக சுட்டனர். இப்படியே துப்பாக்கி சண்டை நடந்து கொண்டிருக்கும் போது, அந்த ஆம்புலன்ஸில் இருந்து ஒருவரும் சுடவில்லை என்பதை உறுதி செய்துகொண்டு பின்னர் அந்த ஆம்புலன்ஸ் இருந்து ஒவ்வொரு உடலாக வெளியேற்றி உள்ளனர்.
பிரபாகரனின் உடல் : ராணுவம் சுடப்பட்டதாக கூறப்படும் அந்த நபர்களில் ஒருவர் தான் பிரபாகரன் என்பதை இலங்கை ராணுவம் உறுதி செய்தது. மேலும், அதனுடன் பிரபாகரனுக்கு மிகவும் உதவிகரமாக இருந்த பொட்டு அம்மான்,சூசை என பலரும் கொல்லப்பட்டனர் என அப்போது தகவல் வந்தது. மேலும், பல முக்கிய விடுதலைப் புலிகள் இயக்க முக்கிய போராளிகள் அதில் கொல்லப்பட்டதாகவும் இலங்கை ராணுவம் அதிகாரபூர்வமாக கூறியது.
மே 18 2009 : 2009ஆம் ஆண்டு மே 18 அன்று காலை பிரபாகரன் உயிரிழந்தார். என்ற செய்தி உலகம் முழுக்க பரவியதும், பலரும் இதனை நம்பவில்லை. இது முற்றிலும் தவறான தகவல் யாருடைய உடலையோ எடுத்து வந்து யூகத்தின் அடிப்படையில் இலங்கை ராணுவம் இவ்வாறு பொய் கூறுகிறது என்று அப்போதே பல்வேறு செய்திகள் வெளியாகின. தனது இறப்பு செய்தியை தானே படித்து கொடிருப்பதுபோல புகைப்படங்கள் கூட வெளியாகின.
கிட்டத்தட்ட 15 வருடங்களாக பிரபாகரன் வெளியே வராத காரணத்தால், அவர் இறந்துவிட்டார் என்றே அனைவரும் நம்பிவிட்ட இந்த நேரத்தில் மூத்த அரசியல்வாதி பழ நெடுமாறனின் இந்த செய்தி தமிழக அரசியல் வட்டாரத்தில் மட்டுமல்லாது உலகம் முழுக்கு சற்று உற்றுநோக்க வைத்துள்ளது.