தவெக மாநாட்டில் விஜய் எவ்வளவு நேரம் பேசுவார்? வெளியான சீக்ரெட் தகவல்!
த.வெ.க மாநாட்டில் விஜய் 45 நிமிடம் ஊழல், நிர்வாக சீர்கேடுகள் மற்றும் தலைவர்கள் குறித்துப் பேசவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு வரும் அக்டோபர் மாதம் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலையில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. மாநாடு நடைபெறும் நாள் நெருங்கியுள்ள காரணத்தால் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஒட்டு மொத்த தமிழகத்தினுடைய பார்வையும் மாநாடு மேல் தான் இருக்கிறது. மாநாட்டில் விஜய் என்ன பேசப்போகிறார்? கட்சியின் கொள்கை என்ன என்பதைத் தெரிந்துகொள்ள ஆவலுடன் காத்துள்ளனர்.
இந்நிலையில், விஜய் மாநாட்டில் என்னென்ன விஷயங்களைப் பற்றிப் பேசப்போகிறார் எவ்வளவு நேரம் பேசப்போகிறார்? மாநாட்டில் என்னென்ன நடக்கப்போகிறது? என்பது பற்றிய விவரம் பற்றிய தகவலும் வெளியாகியிருக்கிறது. அதன்படி, த.வெ.க மாநாடு மாலை 4 மணிக்குத் தொடங்கப்படவுள்ளது.
மாநாட்டிற்கு அக்கட்சித் தலைவர் விஜய் சரியாக 5 மணிக்கு ருகை தர இருக்கிறார். விஜய் வருகை தந்த பிறகு, கட்சி நிர்வாகிகள் மேடையில் அறிமுகம் செய்யப்படத் திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன் அவர்களில் 8 நிர்வாகிகள் மேடையில் பேசுவதற்கான வாய்ப்புகளும் வழங்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதைப்போல, பலருடைய எதிர்பார்ப்பாக இருக்கும் விஜய் பேச்சு மாநாட்டில் 45 நிமிடம் இருக்குமாம். விஜய் அந்த 45 நிமிடங்களில் ஊழல், நிர்வாக சீர்கேடுகள் மற்றும் தலைவர்கள் குறித்துப் பேசவுள்ளதாகவும் கூறப்படுகிறது. பேசி முடித்த பிறகு, கட்சிக்கொள்கை குறித்த விவரங்களை அறிவிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
வழக்கமாக விஜய் படங்களின் இசை வெளியீட்டு விழாவில் பேசும்போதே ரசிகர்களுக்குக் குட்டிக்கதை ஒன்றைக் கூறுவார். எனவே, மாநாட்டில் தொண்டர்களுக்குக் குட்டி கதையைக் கூறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.