வன்கொடுமை விவகாரம் : FIR எப்படி லீக்? ஞானசேகரன் மீது எத்தனை வழக்கு? காவல் ஆணையர் அருண் விளக்கம்!
குற்றம் செய்தவர் அந்த கட்சி, இந்த கட்சி என்ற எந்த பாகுபாடும் காவல்துறைக்கு கிடையாது என சென்னை காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் கோட்டூர்புரம் மகளிர் காவல்நிலையத்தில் மாணவி தரப்பில் இருந்து புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், விசாரணை நடத்திய காவல்துறை ஞானசேகரன் என்பவரை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில், இந்த வழக்கில் FIR லீக்கானது முதல் கைது செய்யப்பட்ட குற்றவாளி ஞானசேகரன் மீது இதற்கு முன் எத்தனை வழக்குகள் உள்ளது என்பது பற்றி காவல்துறை ஆணையர் அருண் செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தி விளக்கம் அளித்துள்ளார். இது பற்றி அவர் பேசிய விஷயங்கள் பின்வருமாறு..
FIR லீக்கானது குறித்து…
பாதிக்கப்பட்டவர்கள் என்ன சொல்கிறார்களோ அதை அப்படியே பதிவு செய்வதுதான் எப்ஐஆர். புதிய குற்றவியல் சட்டத்தால் எப்ஐஆர் தொழில்நுட்ப ரீதியில் லாக் ஆவதில் தாமதம் ஏற்பட்டது.எனவே , அந்த நேரத்தில் ஆன்லைனில் FIR-ஐ பார்த்தவர்கள் பதிவிறக்கம் செய்திருக்கலாம்அவர்கள் மூலம் வெளியே சென்றிருக்கலாம். FIR-லீக்கான உடனே வேகமாக அது முடக்கம் செய்யப்பட்டது. இனிமேல், அது போன்று யாரும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டால் கூட அவர்கள் மீது வழக்குபதிவு செய்யப்படும். FIR-ஐ வெளியிட்டது சட்டப்படி குற்றம் என்பதால் FIR-ஐ வெளியிட்டவரை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.
எத்தனை வழக்குகள்
கடந்த 2013-ஆம் ஆண்டிலிருந்து 20 வழக்குகள் உள்ளது. எல்லா வழக்குகளும் திருட்டு சம்பந்தமான வழக்குகள். ஆனால், 20 வழக்குகளில் பெண்களை துன்புறுத்தியதாக வழக்கு எங்களிடம் இல்லை. இந்த வழக்குகள் தான் இன்னும் நிலுவையில் உள்ளது. ஆனால், இதுவரை பெண்கள் இந்த நபரால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்கிற புகார் இதற்கு முன்பு வரவில்லை. இப்போது தான் வந்திருக்கிறது.
இப்போது இவனிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. அந்த விசாரணையில் அவனுடைய செல்போனை ஆய்வு செய்து வேறு எந்த பெண்ணும் இந்த நபரால் பாதிக்கப்பட்டு இருந்தால் அவர்களை தொடர்பு கொண்டு பேசி நாங்கள் புகார் கொடுக்க சொல்லுவோம். அதன்பிறகு நடவடிக்கை எடுப்போம்” எனவும் காவல் ஆணையர் அருண் தெரிவித்தார்.
சிசிடிவி
தொடர்ந்து பேசிய அவர் ” மொத்தமாக அண்ணா பல்கலைக்கழகத்தில் 70 சிசிடிவி கேமராக்கள் உள்ளது. அதில் 56 சிசிடிவி கேமராக்கள் வேலை செய்துகொண்டு தான் இருக்கிறது. அதன் அடிப்படையில் நாங்கள் விசாரணை செய்தோம். அதன்மூலமும் சில தகவல்கள் எங்களுக்கு கிடைத்துள்ளது” எனவும் தெரிவித்தார்.
அதனைதொடர்ந்து ” இந்த சம்பவத்தில் இதுவரை ஒருவர் மட்டுமே கைது செய்யப்பட்டு இருக்கிறார். அவரிடம் நாங்கள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறோம். குற்றவாளி என உறுதியானதும் கைது நடவடிக்கை நிச்சியமாக எடுப்போம். குற்றவாளி எந்த கட்சியில் இருந்தாலும் அதனை பற்றி எங்களுக்கு எந்த கவலையும் இல்லை. அவன் மீது தவறு இருந்தால் நாங்கள் நடவடிக்கை எடுப்போம்” எனவும் காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.