திடீரென பயங்கரமாக வெடித்து சிதறிய கல்குவாரி …விபத்து நடந்தது எப்படி.?
Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி மருந்து குடோனும் செயல்பட்டு வந்தது. இன்று காலை குவாரிக்கு கொண்டுவரப்பட்ட வெடிபொருட்களை இறக்கும்போது ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர், 8 பேர் படுகாயமடைந்ததாக கூறப்படுகிறது.
மேலும், அருகில் இருந்த 2 லாரிகள் முற்றிலும் சேதமடைந்துள்ளதாகவும், குவாரியை சுற்றி இருந்த 15க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. இதுதொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி காண்போரை பதைபதைக்கச் செய்துள்ளது.
விருதுநகர் காரியாபட்டி கல்குவாரி வெடி விபத்தில் 3 பேர் பலி. #explosive #Mining #Virudhunagar pic.twitter.com/lo20xmENKR
— Alagu Tamil (Sankar C) (@SankarPhD) May 1, 2024
விபத்துக்கான காரணம்
பாறைகளை உடைக்க பயன்படுத்தப்படும் வெடிமருந்துகளை, சரக்கு வேனில் இருந்து குடோனுக்கு உரிய பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றாமல் இடம் மாற்றியதால் விபத்து ஏற்பட்டது தெரிய வந்துள்ளது.
எச்சரிக்கை
இதற்கிடையில், வெடி விபத்து ஏற்பட்ட கல்குவாரியில், மீதமுள்ள வெடிமருந்துகள் இன்னும் அங்கேயே இருப்பதால் மீண்டும் வெடிவிபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக தீயணைப்புத்துறை எச்சரித்துள்ளது. இதன் காரணமாக உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
போராட்டம்
விபத்தை அடுத்து, வெடி விபத்து ஏற்பட்ட கல்குவாரியை மூடக்கோரி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு 5 கி.மீ தூரத்திற்கு வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. பல முறை கோரிக்கை விடுத்தும் கல் குவாரியை மூட நடவடிக்கை எடுக்கவில்லை என அவர்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.