எதுவும் செய்யமுடியாத சூழலில் எப்படி வாக்குக் கேட்க முடியும்-எம்எல்ஏ வெங்கடேசன்..!
தட்டாஞ்சாவடி தொகுதிக்கு எதுவும் செய்யமுடியாத சூழலில் எப்படி மக்களிடம் சென்று வாக்குக் கேட்க முடியும் என திமுக எம்எல்ஏ வெங்கடேசன் தெரிவித்தார்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் நாளை முதல்வர் நாராயணசாமி நம்பிக்கை வாக்கு கோர உள்ள நிலையில் அடுத்தடுத்து எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து வருகின்றனர். சற்று நேரத்திற்கு முன் காங்கிரஸ் எம்எல்ஏ லட்சுமி நாராயணன் ராஜினாமா செய்த நிலையில் தற்போது திமுக எம்எல்ஏ வெங்கடேசன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
திமுக எம்எல்ஏ வெங்கடேசன் ராஜினாமா செய்ததால் காங்கிரஸ் கூட்டணியின் பலம் 12-ஆக குறைந்துள்ளது. ஏற்கனவே ஐந்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்த நிலையில் தற்போது திமுக எம்எல்ஏ தனது பதவியை விலகி உள்ளார்.
எம்.எல்.ஏ பதவியில் இருந்து ராஜினாமா செய்ததையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய வெங்கடேசன், எம்.எல்.ஏ பதவியை மட்டும் தான் ராஜினாமா செய்துள்ளேன். தொடர்ந்து திமுகவில் இருப்பேன். தொகுதிக்கு எதுவும் செய்யமுடியாத சூழலில் எப்படி மக்களிடம் சென்று வாக்குக் கேட்க முடியும். புதுச்சேரி அரசால் தட்டாஞ்சாவடி மக்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லை என தெரிவித்தார்.