“ஸ்வீட் – காரம், தனித்தனி வரி., எங்களால முடியல மேடம்.” நிர்மலா சீதாராமனிடம் கெஞ்சிய ஹோட்டல் ஓனர்.!
ஹோட்டல் உணவுப் பொருட்களுக்கு தனித்தனி ஜிஎஸ்டி வரிவிதிக்கப்படுகிறது. அதனை முறைப்படுத்த வேண்டும் என ஹோட்டல் உரிமையாளர் சங்கத் தலைவர் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கோரிக்கை வைத்தார்.
கோவை : நேற்று கோவையில் கொங்கு மண்டலத்தில் உள்ள அனைத்து தொழிலதிபர்கள், சிறுகுறு தொழில் முனைவோர், ஹோட்டல் உரிமையாளர்கள், மற்ற வணிகர்கள் என பலர் கலந்து கொண்ட தொழில்துறை நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அந்த நிகழ்வில் , ஹோட்டல் உரிமையாளர் சங்கத் தலைவர் சீனிவாசன் மத்திய அமைச்சரிடம் ஜி.எஸ்.டி வரி பற்றி கலகலப்பாக கோரிக்கை வைத்தது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அந்த நிகழ்வில் பேசிய சீனிவாசன் பேசுகையில், ” இந்தம்மா (எம்.எல்.ஏ வானதி சீனிவாசன்) எங்கள் அன்னபூர்ணா ஹோட்டலின் ரெகுலர் வாடிக்கையாளர். இவர் வரும் போதெல்லாம் பில் போடும் போது பிரச்சனை வருகிறது.
ஸ்வீட்க்கு 5% ஜிஎஸ்டி வரி, உணவுக்கு 5 சதவீத வரி, காரத்திற்கு 12 சதவீத வரி. பேக்கரி உணவுகளில் ப்ரெட் மற்றும் பன் ஆகியவைக்கு ஜிஎஸ்டி வரி இல்லை. ஆனால், அதில் உள்ள ஜாம் உள்ளிட்ட பொருட்களுக்கு 18 சதவீதம் வரையில் ஜிஎஸ்டி வரி. இந்தாம்மா (வானதி சீனிவாசன்) எங்கள் ஹோட்டலுக்கு வராங்க., முதலில் ஸ்வீட் சாப்பிடறாங்க அடுத்து காபி, அடுத்து காரம் சாப்பிடறாங்க. நாங்க தனித்தனி ஜிஎஸ்டி போட்டு பில் கொடுக்கிறோம் எங்ககிட்ட சண்டைக்கு வராங்க.
ஒரு பேமிலி வராங்க. அவங்க சாப்பிட்றதுக்கு தனித்தனி ஜிஎஸ்டி வரி போட்டு பில் கொடுக்க வேண்டியுள்ளது. பன் தனியா வாங்குனா ஜிஎஸ்டி இல்ல. ஆனா ஜாம் தடவினால் அதற்கு 18 சதவீத ஜிஎஸ்டி, உடனே கஸ்டமர்ஸ், ‘ பன் , ஜாம் தனித்தனியா தாங்க நாங்க பாத்துகிறோம்.’ எனக் கூறுகிறார்கள். எங்களால கடை நடத்த முடியல.
இதெல்லாம் எங்கள் கஸ்டமர் எம்எல்ஏ அம்மாகிட்ட சொன்னோம். அவங்க, ‘ மத்திய அமைச்சர் வடநாட்டுக்கு அதிகம் போறாங்க. அங்க அதிகமா ஸ்வீட் சாப்பிடறாங்க. அதனால ஸ்வீட்டுக்கு 5 சதவீதம் போட்ருக்காங்க.’ அப்டினு சொல்றாங்க. ” என சீனிவாசன் கூறினார்.
அப்போது பதில் கூறிய நிர்மலா சீதாராமன், “மாநில வாரியாக நாங்க வரி போடுவதில்லை” என கூறினார். பின்னர் மீண்டும் பேசிய சீனிவாசன், “நீங்க எல்லா உணவுப்பொருட்களுக்கும் ஒரே மாதிரி வரி விதித்திடுங்கள். உணவுப்பொருட்களுக்கு தனித்தனி ஜிஎஸ்டியால், எங்கள் கம்பியூட்டர் திணறுகிறது. ஆடிட்டர் திணறுகிறார்கள். ஒரு ஹோட்டலில் சீசன் சமயத்தில் தோராயமாக 7,500 ரூபாய் ரூம் வாடகை வசூலிக்கிறோம். மற்ற நேரங்களில் ஹோட்டல் விடுதியில் அம்மாதிரியான கூட்டம் இருக்காது. ஆனால் வருடம் முழுக்க ஒரே மாதிரி வரி விதிக்கிறார்கள். இதனை சரிப்படுத்தபட வேண்டும்.” என பல்வேறு கோரிக்கைகளை ஹோட்டல் உரிமையாளர் சங்க தலைவர் சீனிவாசன் கலகலப்பாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கோரிக்கை வைத்தார்.