சிறையில் இருந்து வந்த செந்தில் பாலாஜி! அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் மரியாதை!
471 நாட்களுக்கு பிறகு சிறையிலிருந்து வந்த செந்தில் பாலாஜிக்கு திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
சென்னை : சட்டவிரோத பணபரிவத்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்ப்பட்டிருந்த செந்தில் பாலாஜிக்கு இன்று உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதனை அடுத்து, புழல் சிறையில் இருந்து செந்தில் பாலாஜி இன்று மாலை விடுதலைச் செய்யப்பட்டார்.
இந்த நிலையில், அவர் விடுதலையானதை தொடர்ந்து திமுக தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வந்தனர். திமுக தொண்டர்களின் வெற்றி கோஷங்களுக்கு இடையே புழல் சிறையில் இருந்து வெளியில் வந்த செந்தில் பாலாஜி அடுத்து என்ன செய்வார், எங்கு செல்வார், என்ன பேசுவார் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது.
அப்போது, வெளிய வந்த பிறகு தனியார் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்த செந்தில் பாலாஜி, ‘என் மீது நம்பிக்கைக் கொண்ட தமிழ்நாடு முதலமைச்சருக்கு என் வாழ்நாள் முழுவதும் நான் நன்றியுள்ளவனாய் இருப்பேன் எனவும் அமைச்சர் உதயநிதிக்கும் நன்றியை கூறிக்கொள்கிறேன் எனவும்’ தெரிவித்திருந்தார்.
மேலும், ‘என்மீது போடப்பட்ட இந்த பொய் வழக்கிலிருந்து சட்டப் போராட்டம் நடத்தி மீண்டு வருவேன்’ எனவும் பத்திரிகையாளர்களிடம் பேசியிருந்தார். அதன்பின் அங்கிருந்து நேரடியாக சென்னை மெரீனா கடற்கரையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா நினைவிடம் மற்றும் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் நினைவிடத்திற்குச் சென்று மலர் தூவி மரியாதைச் செலுத்தினார்.
இந்த சம்பவம் திமுக தொண்டர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர் பதவியை இழந்த போதிலும் தற்போது மீண்டும் செந்தில் பாலாஜிக்கு அதே பொறுப்புகளை வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், வருகிற செப்-30 அல்லது அக்-1 ம் தேதி மீண்டும் அமைச்சராக செந்தில் பாலாஜி பொறுப்பேற்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.