முன்னாள் அமைச்சர் தங்கமணி வீடுகளில் சோதனை: ஓ.பி.எஸ், இ.பி.எஸ் கண்டனம்!
முன்னாள் அமைச்சர் தங்கமணி வீடுகளில் சோதனை நடைபெறும் நிலையில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
கடந்த சில மாதங்களாக அதிமுக முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் சொத்துக் குவிப்பு புகார் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில், இன்று அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான தமிழ்நாடு முழுவதும் நாமக்கல், ஈரோடு, சென்னை உட்பட 69 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
மேலும், தங்கமணி, அவரது மனைவி சாந்தி, மகன் தரணிதரன் ஆகியோர் மீது ரூ.4.85 கோடி சொத்து சேர்த்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து 5 மணி நேரத்திற்கு மேலாக சோதனை நடைபெற்றுவரும் நிலையில், அதிமுக சார்பில் இந்த சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அதில், தற்சமயம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் உட்கட்சித் தேர்தல் மகிழ்ச்சியோடும், எழுச்சியோடும், உற்சாகத்தோடும் பெருந்திரளான தொண்டர்கள் ஆர்வத்தோடும் கலந்து கொண்டு 35 கழக மாவட்டங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தத் தேர்தலையொட்டி, உளவுத் துறையின் மூலம் கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் முன்பைக் காட்டிலும் கூடுதலாக மெருகேற்றிக் கொண்டு, பலமூட்டிக் கொண்டு வீறுகொண்டு எழுகிறது என்ற செய்தியை தாங்கிக் கொள்ள முடியாத, பொறுத்துக் கொள்ள முடியாத திமுக அரசு, அரசியல் வன்மத்தையும், தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியின் காரணமாகவும்,
லஞ்ச ஒழிப்புத் துறையை தன்னுடைய ஏவல் துறையாக மாற்றி, அன்புச் சகோதரர் முன்னாள் அமைச்சர் பி. தங்கமணி, எம்.எல்.ஏ அவர்களுடைய இல்லத்திலும், அவருடைய நண்பர்கள், உறவினர்கள் இல்லங்களிலும் சோதனை என்கின்ற பெயரில் மிகப் பெரிய வெறியாட்டத்தை கட்டவிழ்த்து விட்டிருக்கிறது. இதை நாங்கள் அடிப்படையிலேயே வன்மையாகக் கண்டிக்கின்றோம் என தெரிவித்துள்ளனர்.