தமிழிசையின் இல்லத்திற்கு சென்று ஆறுதல் கூறிய அமித் ஷா.!
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழிசை சௌந்தரராஜனை அவரது இல்லத்தில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார்.

சென்னை : இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்திருந்திருக்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழிசை சௌந்தரராஜன் வீட்டிற்கு நேரில் சென்று அவரது தந்தை குமரி அனந்தன் போட்டோவிற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். குமரி அனந்தன், வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவால் கடந்த ஏப்ரல் 8ம் தேதி அன்று சென்னையில் காலமானார்.
தமிழிசை பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவர், மேலும் அவரது தந்தையின் மறைவுக்கு பல அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி இருந்தனர். இந்த நிலையில், அமைச்சர் அமித்ஷா இன்று சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தமிழிசையின் இல்லத்திற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.
பின்னர், தந்தையை இழந்து வாடும் தமிழிசையின் கரங்களை பற்றி ஆறுதல் கூறி தேற்றினார். அப்போது அமைச்சர் எல். முருகன், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோர் உடன் இருந்தனர். இந்த சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் பார்க்கப்படுகிறது.
இந்த சந்திப்பின் போது, அமித் ஷா தமிழிசையின் தந்தையின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்ததுடன், குமரி அனந்தனின் அரசியல் பங்களிப்புகளையும் நினைவு கூர்ந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, பகல் 12 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் அமித் ஷா.
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெறும் இந்த செய்தியாளர் சந்திப்பில் அமித்ஷாவுடன் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் பங்கேற்கின்றனர். செய்தியாளர் சந்திப்புக்காக 7 இருக்கைகள் மட்டுமே போடப்பட்டுள்ளதால், இடம்பெறப் போகும் தலைவர்கள் யார் யார் என கேள்வி எழுந்துள்ளது.