தனியார் நிதிநிறுவன கடனுக்கு வீடு ஜப்தி – விரக்தியில் விவசாயி தற்கொலை!
தனியார் நிதிநிறுவன கடனுக்காக வீடு ஜப்தி செய்யப்பட்டதால், விரக்தியில் விவசாயி தற்கொலை செய்து உயிரிழந்துள்ளார்.
தேனி மாவட்டத்திலுள்ள தேவதானம்பட்டியை சேர்ந்த காமக்காபட்டி சேர்ந்த 62 வயதுடைய அர்ஜுனன் எனும் விவசாயி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் 15 லட்சம் வீடு கட்டுவதற்காக கடன் வாங்கியுள்ளார். இந்த 15 லட்சத்தை பல்வேறு தவணையில் இவர் செலுத்தியுள்ளார். இருப்பினும் மூன்று தவணை தொகையை அவரால் சில பொருளாதார சிக்கல் காரணமாக செலுத்த முடியாமல் சென்றுள்ளது. பின்பு மீண்டும் தவணை தொகையை செலுத்துவதற்கு சென்றபொழுது, மொத்தமாக அந்த தொகையை செலுத்துமாறு தனியார் நிதி நிறுவனத்தில் கூறியுள்ளனர். இதனால் வட்டியுடன் சேர்த்து கூடுதல் தொகை செலுத்த கூறியதால் அவர் பணம் இல்லாத நிலையில் இருந்துள்ளார்.
அவ்வாறு வட்டியுடன் செலுத்தாவிட்டால் வீட்டை ஜப்தி செய்துவிடுவோம் என்று தெரிவித்துள்ளனர். மேலும் இதுதொடர்பாக அர்ஜுனன் வழக்கு தொடர்ந்துள்ளார். இருப்பினும் வீடு நிறுவனத்தினால் ஜப்தி செய்யப் பட்டுள்ளது. வீடு ஜப்தியாவதை தடுக்க முடியாத அவர் விஷம் அருந்தி விட்டு திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்துள்ளார். தாலுகா அலுவலகங்களில் வைத்து குறைதீர்க்கும் கூட்டம் தற்பொழுது நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அலுவலகம் முன்பாக வந்து நின்று ஒருவர் திடீரென மயங்கி விழுவதை கண்டு அங்கிருந்தவர்கள் ஓடிச்சென்று பார்த்தபோது வாயில் நுரை தள்ளியபடி இருந்ததால், மருத்துவமனை சென்று விசாரித்தபோது மருத்துவர்கள் அவர் விஷ மருந்து அருந்தி இருப்பதாக கூறியுள்ளனர். இதுகுறித்து மேலும் அவர் விஷம் அருந்தி விட்டு சில ஆதாரங்களை கையில் வைத்தபடி வந்துள்ளார். இந்நிலையில் இதுகுறித்து தாடிக்கொம்பு போலீசார் வழக்கு பதிவு செய்து அந்நிறுவனத்தின் மீது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் உயிரிழந்த அர்ஜூனனின் மனைவி மற்றும் மகன்கள் தற்போது அவரது உடலை வாங்கியுள்ளனர்.