கனமழை எதிரொலி ! நீலகிரி குன்னூர் தாலுகாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
நேற்று இரவு நீலகிரி குன்னூரில் பெய்து வந்த கனமழைக் காரணமாக அங்குள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி : வடகிழக்குப் பருவமழையின் தாக்கம் காரணமாக தமிழகம் முழுவதும் ஒரு சில மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. மேலும், இதனால் நீலகிரியிலும் கடந்த சில நாட்களாக நல்ல மழை கொட்டித் தீர்த்தது. அதிலும், நேற்று முழுவதும் நல்ல மழை பெய்ததன் காரணமாக ஒரு சில இடங்களில் மண் சரிவும் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், நேற்று இரவு நீலகிரி குன்னூர் தாலுகாவில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால், மழையின் தீவிரத்தை புரிந்து கொண்டு அதன் முன்னேற்பாடாக குன்னூர் தாலுகாவில் இருக்கும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நீலகிரி மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளார்.
மேலும், கனமழை காரணமாக முன்னதாக உதகை – மேட்டுப்பாளையம் செல்லும் மலை ரயில் சேவையும் வரும் நவ-5 (நாளை) வரை ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.