15 நாட்களுக்கு ஒருமுறை விடுமுறை..! காவலர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை – தமிழ்நாடு டிஜிபி
சிறப்பு ஆய்வாளர்களுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை விடுமுறை வழங்க முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார் என்று டிஜிபி சைலேந்திர பாபு அறிவிப்பு.
இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார் என்று தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்தார்.
சென்னை புதுப்பேட்டை காவலர் பல்பொருள் அங்காடியில் மின்தூக்கி வசதியை தொடங்கி வைத்த பிறகு செய்தியாளர் சந்திப்பில் பேசிய டிஜிபி சைலேந்திர பாபு, இந்த ஆண்டில் காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் சிறப்பு ஆய்வாளர்களுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை விடுமுறை வழங்கவும், இரவு ரோந்துப் பணியில் ஈடுப்படும் காவலர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்கவும் முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார் என்று கூறினார்.
மேலும், தமிழ்நாட்டில் கடந்த ஓராண்டாக சட்டம்-ஒழுங்கு சிறப்பாக உள்ளது என்றும் போதைப்பொருள் தொடர்பாக தமிழக காவல்துறை மிக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது எனவும் தெரிவித்தார்.