நாளை கடலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கடலூர் : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற நவம்பர் 27-ஆம் தேதி சூறாவளி புயலாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக, நவம்பர் 28 வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
குறிப்பாக, இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக கடலூர் மாவட்டத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. எனவே, இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் ரெட் அலர்ட் எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஏற்கனவே கடலூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருவதால் நாளையும் அங்கு கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஏற்கனவே, கனமழை எதிரொலியாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார் கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என அறிவித்துள்ளார்.