நாளை ரெட் அலர்ட்! மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!
கனமழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு புதன்கிழமை விடுமுறை என மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி அறிவித்துள்ளார்.
மயிலாடுதுறை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது . ஏனென்றால், இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்பாக வெளியாகி வரும் செய்தி மழையின் தாக்கம் அதிகமாக இருக்குமோ என்கிற வகையில் பயமடைய செய்து வருகிறது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற நவம்பர் 27-ஆம் தேதி (நாளை) சூறாவளி புயலாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக, நவம்பர் 28 வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
குறிப்பாக, நாளை மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து இருந்தது. எனவே, கனமழையை கருத்தில் கொண்டு மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி பள்ளி, கல்லூரிகளுக்கு புதன்கிழமை விடுமுறை என அறிவித்துள்ளார்.
ஏற்கனவே, கனமழை எதிரொலியாக புதுச்சேரி மற்றும் காரைக்கால், கடலூர், ஆகிய இடங்களில் பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது மயிலாடுதுறை மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என அறிவிப்பு வெளியாகியுள்ளது.