வாக்கெடுப்பு நடத்தி என்னை கட்சியில் இருந்து நீக்கிவிடுங்கள்! மல்லை சத்யா பேச்சு!
கடைசி வரை வைகோவின் தொண்டனாக இருக்கிறேன் என மல்லை சத்யா பேசியுள்ளார்.

சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்து இருந்தார். அவர் வெளியீட்டு இருந்த அறிக்கையில் ” மதிமுக தலைவருக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் ஒருவர் செயல்படுகிறார். கட்சிக்கு பழியை சுமத்தி அதில் சுகம் காணும் நபர் மத்தியில் என்னால் கட்சிப் பணி செய்ய முடியாது என்னால் இயக்கத்திற்கோ, தலைவருக்கோ எந்த சேதமும் வந்துவிடக்கூடாது .
கடந்த 7 ஆண்டுகளாக நான் மேற்கொண்டு வந்த முயற்சிகளை கட்சியினர் தொடர வேண்டும். ஏப்ரல் 20-ல் சென்னையில் நடைபெறும் கட்சி நிர்வாக குழு கூட்டத்தில் நான் பங்கேற்ப்பேன். திருச்சி எம்பியாக நான் தொடர்ந்து செயல்படுவேன்” என கட்சியில் இருந்து வெளியேறுவதற்கான காரணத்தையும் அவர் கூறியிருந்தார்.
ஏற்கனவே, அவரை சமாதானம் செய்யும் முடிவில் வைகோ இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்த சூழலில், சென்னை எழும்பூரில் உள்ள மதிமுகவின் தலைமை அலுவலகத்தில், அவைத்தலைவர் அர்ஜுன் ராஜ் தலைமையில் அக்கட்சியின் நிர்வாகக் குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் துரை வைகோ மற்றும் மல்லை சத்யா இருவரும் பரஸ்பர வணக்கம் கூட வைத்து கொள்ளவில்லை.
நிர்வாக குழு கூட்டத்தில் துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா வருகை தந்த போது கூட்டத்தில் இருந்த 100க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் யாரும் எழுந்து நின்று வணக்கம் கூட வைக்கவில்லை எனவும் தகவல்கள் வெளியானது.
இந்த சூழலில், மதிமுகவின் துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய தயாராக இருப்பதாக சற்று வேதனையுடன் மல்லை சத்யா பேசியிருக்கிறார். இது குறித்து பேசிய அவர் ” கட்சியின் நலனுக்கு எதிராக எந்த இடத்திலும் நான் செயல்படவில்லை. தற்போது வரை வைகோவுக்கு துணையாகதான் உள்ளேன் துரை வைகோ அரசியலுக்கு வரவேண்டும் என முதன் முதலில் கூறியது நான் தான்.
அப்படி இருக்கையில் நான் எதற்காக கட்சிக்கு எதிராக செயல்படப்போகிறேன்? மதிமுகவின் துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய தயார். நிர்வாகிகள் மத்தியில் வாக்கெடுப்பு நடத்தி கட்சியை விட்டே என்னை நீக்கி விடுங்கள். கடைசி வரை வைகோவின் தொண்டனாக இருந்துவிட்டு போகிறேன்” எனவும் மல்லை சத்யா தெரிவித்தார்.