சென்னையில் HMPV வைரஸ் : முகக்கவசம் அணிய வேண்டும்! – தமிழக அரசு அறிவுறுத்தல்!
முகக்கவசம், சுகாதாரம் மற்றும் சரியான நேரத்தில் கண்டறிவதன் மூலம் இதன் தொற்றை தடுக்க முடியும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
சென்னை : சீனாவில் பாதிக்கும் HMPV தொற்றானது, இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஏற்கனவே, கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் 2 கை குழந்தைகளுக்கு இந்த HMPV தொற்று கண்டறியப்பட்டுள்ளது. குஜராத், கர்நாடகாவை தொடர்ந்து தமிழகத்திலும் 2 குழந்தைகளுக்கு HMPV தொற்று அறிகுறிகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தலைநகர் சென்னையில் சேத்துப்பட்டு பகுதி தனியார் மருத்துவமனையிலும், கிண்டியில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் உள்ள 2 குழந்தைகளுக்கு HMPV தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.மேற்கண்ட இரு குழந்தைகளும் சளி, இருமல், காய்ச்சல் ஆகிய உடல்நல பாதிப்புகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள் என்றும் கூறப்படுகிறது.
இதனையடுத்து, சென்னையில் ஒருவரும், சேலத்தில் ஒருவரும் மனித HMPV நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது அவர்கள் நலமுடன் இருப்பதாக மருத்துவதுறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் போலவே இந்த வைரஸ் பரவி வருவதன் காரணத்தால் மக்கள் சற்று அதிர்ச்சியில் உள்ளனர். இந்த சூழலில், மக்கள் அச்சப்பட தேவையில்லை, கட்டுப்படுத்தும் அளவிலேயே தமிழ்நாட்டில் காய்ச்சல் பாதிப்புகள் உள்ளது. மக்கள் கூட்டம் அதிகம் இருக்கும் இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும் என தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அறிக்கை வெளியீட்டு அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து வெளியான அறிக்கையில் ” ஜனவரி 6, 2025 அன்று, சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம். இந்திய அரசு, மத்திய சுகாதார செயலாளர் தலைமையில் அனைத்து மாநில சுகாதார அதிகாரிகளுடன் வீடியோ கான்பரன்ஸ் நடத்தியது.சுகாதாரத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தமிழக சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். எச்எம்பிவி வைரஸ் நிலையாக இருப்பதாகவும், அது பீதியை ஏற்படுத்தக் காரணம் அல்ல என்றும் இந்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. எனவே மக்கள் யாரும் அச்சப்படவேண்டாம்” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.