HMPV தொற்று எதிரொலி : மீண்டும் முகக்கவசம்., நீலகிரியில் கட்டாயம்!
தமிழ்நாட்டில் 2 பேருக்கு HMPV தொற்று உறுதியானதை அடுத்து நீலகிரியில் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
நீலகிரி : சீனாவில் 14 வயதுக்குட்பட்டோரை அதிகம் பாதித்துள்ள HMP வைரஸ் தொற்றானது இந்தியாவிலும் சிலருக்கு உறுதியாகியுள்ளது என தகவல்கள் வெளியாகின. கர்நாடகாவில் 2 குழந்தைகளுக்கும், குஜராத்தில் ஒரு குழந்தைக்கும் இந்த HMPV தொற்று முதலில் உறுதிசெய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து, நேற்று சென்னையில் சேத்துப்பட்டு மற்றும் கிண்டி தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல், சளி உள்ளிட்ட உடல்நல குறைவால் பாதிக்கப்பட்ட இரு குழந்தைகளுக்கு HMPV தொற்று இருப்பது உறுதியானது. இது சீனாவில் இருந்து பரவிய தொற்று அல்ல என்றும், இந்த வைரஸ் 2001 முதலே இங்கு இருக்கிறது என்றும் தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் சுப்ரியா சுஹா தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து கொரோனா காலத்தில் முன்னெடுக்கப்பட்ட ஒரு சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள சுகாதாரத்துறை, மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு ஒரு புதிய உத்தரவை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, நீலகிரி மாவட்டத்திற்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் உள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருவார்கள் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீலகிரி மாவட்டம் முழுவதும் பொது இடங்களில் கூடும் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.