எச்ஐவி ரத்தம் கர்ப்பிணி பெண்ணிற்கு ஏற்றப்பட்ட விவகாரம்! 25 லட்சம் நிவாரண தொகை, அரசு வேலை, வீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு!
சாத்தூர் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்ணிற்கு தவறுதலாக எச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் பொது நலவழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி, ‘ பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு 25 லட்சம் நிதியுதவி அளிக்கவும், அந்த நிதியில் 10 லட்சம் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரிலும், 15 லட்சத்தை பாதிக்கப்பட்ட பெண்ணின் குழந்தைகள் பெயரிலும் பிரித்து கொடுக்க உத்தரவு இடப்பட்டுள்ளது. பெண்ணின் குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்ட நிதியானது, அந்த குழந்தைகளுக்கு 18 வயது பூர்த்தியான பிறகுதான் நிவாரண தொகையை எடுக்க முடியும் வகையில் வங்கியில் செலுத்த உத்தரவிட்டுள்ளது.
மேலும், செவிலியர், எய்ட்ஸ் நோய் தடுப்பு துறை என ஏதேனும் ஒரு துறையில், அந்தந்த துறைகளுக்கான விதிகளுக்கு உட்பட்டு, பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு அரசு வேலை வழங்கவும், 450 சதுர அடிக்கு குறையாமல் ஒரு வீடும் வழங்கவும், உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.